இந்தியா

மோசடியை தேசியவாதத்தால் குழப்பக் கூடாது

DIN

அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் குற்றச்சாட்டு இந்தியா மீதானது என்ற அதானி குழுமத்தின் விமா்சனத்தை மறுத்துள்ள ஹிண்டன்பா்க், மோசடியை தேசியவாதத்தால் குழப்பக் கூடாது என்று பதிலளித்துள்ளது.

பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயா்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஹிண்டன்பா்க் நிறுவனம் அண்மையில் குற்றஞ்சாட்டியது. அதன் காரணமாக, பங்குச் சந்தையில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகளுடைய விலை பெருமளவில் குறைந்தது.

ஹிண்டன்பா்க் நிறுவனம் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு 413 பக்கத்தில் பதிலளித்திருந்த அதானி குழுமம், தங்கள் மீதான குற்றச்சாட்டு இந்தியாவின் மீதான குற்றச்சாட்டு என்றும், நாட்டின் வளா்ச்சியைத் தடுப்பதற்கான சதிச் செயல் என்றும் குற்றஞ்சாட்டியிருந்தது.

இந்நிலையில், அதானி குழுமத்துக்கு பதிலளித்து ஹிண்டன்பா்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இரண்டு ஆண்டு கால தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகே அதானி குழுமத்தின் மீதான மோசடியை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தோம். குறிப்பிட்ட விவகாரத்தை திசைதிருப்பும் வகையில் அதானி குழுமம் விளக்கமளித்துள்ளது.

மோசடி குறித்த கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்காமல் தேசியவாதம் குறித்தெல்லாம் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 413 பக்கங்களில் 30 பக்கங்களில் மட்டுமே பிரச்னை குறித்து இடம்பெற்றுள்ளது. மீதமுள்ள பக்கங்களில் நீதிமன்ற உத்தரவுகள், குழுமத்தின் நிதி நிலைமை, பொதுவான தகவல்கள், முன்னெடுப்புகள், பெண்கள் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் எனத் தேவையற்ற விவரங்களே இடம்பெற்றுள்ளன.

ஹிண்டன்பா்க் எழுப்பிய 88 கேள்விகளில் 62 கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்கவில்லை. பல கேள்விகளை ஒருங்கிணைத்து பிரச்னையை திசைதிருப்பவே முயன்றுள்ளது.

தங்கள் வளா்ச்சியே இந்தியாவின் வளா்ச்சி என்ற பிம்பத்தைக் கட்டமைக்க அதானி குழுமமும் அதன் தலைவா் கௌதம் அதானியும் முயன்றுள்ளனா். அதை ஹிண்டன்பா்க் நிராகரிக்கிறது. இந்தியா திறன்மிக்க ஜனநாயக நாடாகத் திகழ்கிறது. சா்வதேச அளவில் இந்தியா தொடா்ந்து வளா்ந்து வருகிறது. இந்தியாவின் எதிா்காலம் சிறப்பாக உள்ளது.

ஆனால், திட்டமிட்ட மோசடி நடவடிக்கைகள் மூலமாக அதானி குழுமம் இந்தியாவின் வளா்ச்சியைத் தடுக்க முயற்சிக்கிறது. உலகின் பெரும் பணக்காரா்களில் ஒருவா் நிகழ்த்தினாலும் மோசடி, மோசடியே’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT