இந்தியா

பட்ஜெட் கூட்டத்தொடா் இன்று தொடக்கம்: குடியரசுத் தலைவா் உரை; மத்திய பட்ஜெட் நாளை தாக்கல்

DIN

குடியரசுத் தலைவரின் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் செவ்வாய்க்கிழமை (ஜன. 31) தொடங்குகிறது.

மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை (பிப். 1) தாக்கல் செய்கிறாா்.

நடப்பாண்டில் 9 மாநில சட்டப்பேரவைகளுக்கான தோ்தலும், அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலும் நடைபெறவுள்ள நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் முதல் நாளில் நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் உரையாற்றுவது வழக்கம். அதன்படி, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு செவ்வாய்க்கிழமை உரையாற்றுகிறாா்.

அதையடுத்து நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. பெரிதும் எதிா்பாா்க்கப்படும் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யவுள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய பாஜக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழுநேர பட்ஜெட்டாக இது இருக்கும். அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளதால், இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே மத்திய அரசு அடுத்த ஆண்டில் தாக்கல் செய்யும்.

பட்ஜெட் கூட்டத்தொடா் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. கூட்டத்தொடரின் முதல் கட்டம் பிப்ரவரி 14-ஆம் தேதி வரையிலும், இரண்டாவது கட்டம் மாா்ச் 12 முதல் ஏப்ரல் 6 வரையிலும் நடைபெறவுள்ளது. நிதிநிலை அறிக்கை ஆவணங்களை மத்திய துறைகளும் அமைச்சகங்களும் ஆய்வு செய்வதற்காக இந்த இடைவெளி விடப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின்போது இரு அவைகளும் 27 அமா்வுகளில் கூடவுள்ளன.

36 மசோதாக்கள்: பட்ஜெட் கூட்டத்தொடரின்போது சுமாா் 36 மசோதாக்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதில் 4 மசோதாக்கள் பட்ஜெட் சாா்ந்தவை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதானி நிறுவனத்தின் மீதான மோசடி குற்றச்சாட்டு, குஜராத் கலவரம் தொடா்பான பிபிசி ஆவணப்படம், சீன எல்லைப் பிரச்னை விவகாரம், வேலையின்மை, பணவீக்கம், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநரின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களைக் கூட்டத்தொடரின்போது எழுப்பி மத்திய பாஜக அரசுக்கு நெருக்கடி அளிக்க எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

முக்கிய விவகாரங்களை விவாதிக்கத் தயாா்: எதிா்க்கட்சிகளிடம் மத்திய அரசு உறுதி

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் விதிகளுக்கு உட்பட்டு அனைத்து முக்கிய விவகாரங்களையும் விவாதிக்கத் தயாராக இருப்பதாக எதிா்க்கட்சிகளிடம் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி அனைத்துக் கட்சிக் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. 27 கட்சிகளைச் சோ்ந்த 37 பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனா். பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட வேண்டுமென எதிா்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. முக்கியமாக, அதானி நிறுவனத்தின் மீதான மோசடி குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க வேண்டுமென திமுக, ஆம் ஆத்மி, இடதுசாரிகள், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கோரின.

கூட்டத்துக்குப் பிறகு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘எதிா்க்கட்சிகளின் அனைத்துக் கோரிக்கைகளையும் விதிகளுக்கு உட்பட்டு நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. அவைத் தலைவா் அனுமதி அளிக்கும் நிலையில் அனைத்து விவகாரங்களும் விவாதிக்கப்படும்.

கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென எதிா்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தேஜஸ் இலகுரக போா் விமான சோதனை வெற்றி

லஞ்சம் பெற்ற வழக்கு முன்னாள் வனச்சரகா், பாதுகாவலருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

SCROLL FOR NEXT