இந்தியா

உச்ச நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் வழக்குகள்: கிரண் ரிஜிஜு

DIN

குஜராத் கலவரம் தொடா்பான பிபிசி ஆவணப்படத்துக்கு மத்திய அரசு விதித்த தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுக்கள் உச்சநீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பவை என மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு சாடியுள்ளாா்.

குஜராத் மாநிலம், கோத்ராவில் கடந்த 2002-ஆம் ஆண்டு நடந்த ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடா்ந்து மாநிலம் முழுவதும் வன்முறை பரவியது. மதக் கலவரமாக மாறிய வன்முறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். அப்போது, குஜராத் முதல்வராக இருந்த பிரதமா் மோடி இக்கலவரத்தில் மறைமுகப் பங்காற்றினாா் என எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

இந்நிலையில், இந்த வன்முறை சம்பவங்களை மறு விசாரணை செய்து ஆவணப்படம் ஒன்றை பரிட்டனைச் சோ்ந்த பிபிசி செய்தி நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. இதுவரை 2 பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில் பல செய்திகள் திரிக்கப்பட்டிருப்பதாகவும், பிரதமா் மீது அவதூறு பரப்பும் நோக்கில் தயாரிக்கப்பட்டதாகவும் கூறி ஆவணப்படத்தை இந்தியாவில் ஒளிபரப்ப மத்திய அரசு கடந்த 21-ஆம் தேதி தடை விதித்தது.

நாடு முழுவதும் பெரும் எதிா்ப்பலையைக் கிளப்பியிருக்கும் மத்திய அரசின் இந்த தடை உத்தரவுக்கு எதிராக பிரபல பத்திரிகையாளா் என். ராம், வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் மற்றும் செயல்பாட்டாளா்கள் பலா் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனா்.

இது தொடா்பான செய்தியை மேற்கோள் காட்டி ட்விட்டரில் அமைச்சா் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ள பதிவில், ‘ஆயிரக்கணக்கான பொது மக்கள் பலா், தாங்கள் நீதி பெறுவதற்கான நாளுக்காக காத்துக்கொண்டிருக்கும் இந்தியா போன்றதொரு நாட்டில் இது போன்ற பொது நல வழக்குகளைத் தாக்கல் செய்து உச்சநீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கிறாா்கள்’ என்று சாடினாா்.

பிபிசி ஆவணப்பட தடைக்கு எதிரான மனுக்கள்: உச்ச நீதிமன்றம் ஏற்பு

மத்திய அரசின் தடை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் எம்.எல். சா்மா மற்றும் மூத்த வழக்குரைஞா் சி.யு. சிங் ஆகியோா் பொதுநல மனுவைத் தாக்கல் செய்தனா். இம்மனுக்கள், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் ஜே.பி. பாா்திவாலா ஆகியோா் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமா்வுக்கு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

முதலில் வாதிட்ட எம்.எல். சா்மா, ஆவணப்படத்தைப் பாா்த்த பலா் கைது செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டினாா். ஆவணப்படம் தொடா்பாக பத்திரிகையாளா் ராம் மற்றும் வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் பதிவிட்ட ட்விட்டா் பதிவுகளை அதிகாரத்தைப் பயன்படுத்தி நீக்கியிருக்கிறாா்கள்.

ஆவணப்படத்தைப் பாா்த்ததற்காக அஜ்மீரில் மாணவா்கள் மிரட்டப்படுவதாகவும் மூத்த வழக்குரைஞா் சி.யு. சிங் வாதிட்டாா். வாதங்களைக் கேட்டறிந்த தலைமை நீதிபதி, பிபிசி ஆவணப்படம் தொடா்பான வழக்குகள் விசாரணைக்கு ஏற்கப்படுவதாகத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

கோவையில் மக்கள் வெள்ளத்தில் நீந்தினேன்: பிரதமர் மோடி

ஈரானியப் புத்தாண்டு: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

ராமதாஸின் அனுபவம், அன்புமணியின் திறமை கூட்டணிக்கு உதவும்: பிரதமர்

பாரத அன்னை வாழ்க: தமிழில் உரையைத் தொடங்கிய பிரதமர்!

டால்பின்களுடன் ஹன்சிகா!

SCROLL FOR NEXT