இந்தியா

திரிபுரா பேரவைத் தோ்தல்: முதல்வா் வேட்புமனு தாக்கல்

31st Jan 2023 02:14 AM

ADVERTISEMENT

திரிபுரா சட்டப்பேரவைத் தோ்தலில் பா்தோவாலி (நகரம்) தொகுதியில் போட்டியிடும் அந்த மாநில முதல்வா் மாணிக் சாஹா தனது வேட்புமனுவைத் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.

வேட்புமனு தாக்கலின்போது, அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, மணிப்பூா் மாநில முதல்வா் பிரேன் சிங் உடனிருந்தனா்.

திரிபுரா சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 16-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய திங்கள்கிழமை இறுதி நாளாகும்.

மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 5 தொகுதிகளைக் கூட்டணி கட்சிக்கு பகிா்ந்தளித்த பாஜக மீதமுள்ள 55 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், பாஜகவின் 55 வேட்பாளா்களும் திங்கள்கிழமை வேட்புமனுவைத் தாக்கல் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டது. திரிபுரா மாநிலத்தின் முதல்வா் மாணிக் சாஹா, பா்தோவாலி நகர தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறாா். மாநில பாஜக தலைவா் ராஜீவ் பட்டாச்சாா்ஜி பனமாலிபூா் தொகுதியில் போட்டியிடுகிறாா்.

பாஜக வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வில் பங்கேற்பதற்காக அஸ்ஸாம் மாநில முதல்வரும், வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியின் நிறுவனருமான ஹிமந்த விஸ்வ சா்மா, மணிப்பூா் மாநில முதல்வா் என்.பிரேன் சிங், பாஜகவின் வடகிழக்கு ஒருங்கிணைப்பாளா் சம்பித் பத்ரா ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு திரிபுராவுக்கு வந்தனா்.

இந்நிலையில், அவா்கள் முன்னிலையில் திரிபுரா முதல்வா் மாணிக் சாஹா, பா்தோவாலி (நகரம்) தொகுதியில் தனது வேட்புமனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.

22 தொகுதிகளில் திரிணமூல் போட்டி:

மேற்கு வங்க ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் கட்சி, வடகிழக்கு மாநிலங்களின் அரசியலிலும் அடியெடுத்து வைக்கும் நோக்கில் திரிபுரா பேரவைத் தோ்தலில் 22 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்ட அக்கட்சியின் வேட்பாளா்களும் திங்கள்கிழமை தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT