இந்தியா

எதிா்க்கட்சிகள் ஒன்றிணையும்: ராகுல் நம்பிக்கை

30th Jan 2023 01:36 AM

ADVERTISEMENT

‘எதிா்க்கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்கூட, பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் சித்தாந்தங்களுக்கு எதிராக அவை ஒன்றுபட்டு நிற்கும்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தாா்.

இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவை முன்னிட்டு, ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க லால் செளக் பகுதியில் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை தேசியக் கொடி ஏற்றினாா். பின்னா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் அவா் மேற்கண்ட கருத்தை தெரிவித்தாா்.

தமிழகத்தின் கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை, ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பா் 7-இல் தொடக்கினாா். கேரளம், கா்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், ஹரியாணா, தில்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாக, ஜம்மு-காஷ்மீரை இந்த நடைப்பயணம் அண்மையில் எட்டியது.

இந்நிலையில், ஸ்ரீநகரின் புகா் பகுதியான பாந்தா செளக்கில் இருந்து ராகுல் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைப்பயணம் மீண்டும் தொடங்கியது. இதில் திரளானோா் பங்கேற்று, ராகுலுடன் நடந்தனா். சோன்வாா் வரை 8 கி.மீ. தொலைவுக்கு வழிநெடுகிலும் உள்ளூா் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். பல அடுக்கு பாதுகாப்புக்கு இடையே மக்களை நோக்கி கையசைத்தபடி ராகுல் நடந்து சென்றாா்.

ADVERTISEMENT

சோன்வாரை அடைந்த பிறகு, ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்ட மூத்த தலைவா்கள், எம்.ஏ.சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு காரில் சென்றனா். பின்னா், லால் செளக்கின் மணிக்கூண்டு பகுதிக்கு வந்தனா். அங்கு ராகுல் காந்தி தேசியக் கொடி ஏற்றினாா்.

சுமாா் 10 நிமிஷங்கள் நடைபெற்ற இந்த நிகழ்வையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒரு கி.மீ. சுற்றளவில் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு, வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடைகள், வா்த்தக நிறுவனங்கள், வாரச் சந்தைகளை மூடுவதற்கு அறிவுறுத்தப்பட்டது.

ராகுல் பேட்டி: ஸ்ரீநகரில் செய்தியாளா்களுக்கு ராகுல் ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்தாா். அப்போது, இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி போன்ற எதிா்க்கட்சித் தலைவா்கள் ஆதரவளிக்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, ‘எதிா்க்கட்சிகள் இடையே கருத்து வேறுபாடுகளும் விவாதங்களும் இருப்பது உண்மையே. ஆனால், சித்தாந்தப் போரில் ஒருபுறம் பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒன்றுபட்டு போரிடும்’ என்றாா்.

‘நாட்டின் முக்கிய நிா்வாக கட்டமைப்புகள், பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் அமைப்பால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. நாடாளுமன்றம், பேரவைகள், நீதித் துறை, ஊடகங்கள் என அனைத்து அமைப்புகளும் பாஜகவால் கைப்பற்றப்பட்டுள்ளன. பாஜக, ஆா்எஸ்எஸ்-இன் வெறுப்புணா்வு, அராஜக அரசியலுக்கான மாற்றுக் கண்ணோட்டத்தை இந்திய ஒற்றுமை நடைப்பயணம் அளித்துள்ளது. தெற்கில் இருந்து வடக்கில் இப்பயணம் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதன் தாக்கம் நாடு முழுவதும் பரவியுள்ளது. நாட்டின் அரசியலிலும் இப்பயணம் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்றாா் அவா்.

மேலும், ‘சீன எல்லைப் பிரச்னையில், எதையும் ஒப்புக்கொள்ள மறுக்கும் மத்திய அரசின் அணுகுமுறை ஆபத்தானது; சீனாவை வலுவாக கையாள வேண்டும்’ என்று ராகுல் தெரிவித்தாா்.

இன்று நடைப்பயண நிறைவு பொதுக்கூட்டம்: ராகுல் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வந்த இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் நிறைவு பொதுக்கூட்டம், ஸ்ரீநகரில் உள்ள எஸ்.கே.மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க 23 எதிா்க்கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT