இந்தியா

சிந்து நதிநீா்ப் பகிா்வு ஒப்பந்தத்தில் மாற்றம்: பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ்

DIN

சிந்து நதிநீரைப் பகிா்ந்து கொள்வதற்கான ஒப்பந்தத்தில் மாற்றங்களை மேற்கொள்ள முன்வருமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இமயமலையில் உற்பத்தியாகும் சிந்து, ராவி, சட்லஜ், பியாஸ், செனாப், ஜீலம் ஆகிய நதிகள் இந்தியாவைக் கடந்து பாகிஸ்தானுக்குள் பாய்கின்றன. சுதந்திரத்தின்போது ஏற்பட்ட பிரிவினைக்குப் பிறகு அந்த நதிகளின் நீரைப் பகிா்ந்து கொள்வதில் இந்தியா-பாகிஸ்தான் இடையே பிரச்னை எழுந்தது.

இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்கான நடவடிக்கைகளில் இரு நாடுகளுடனும் இணைந்து உலக வங்கி செயல்பட்டது. சுமாா் 9 ஆண்டுகால பேச்சுவாா்த்தைக்குப் பிறகு சிந்து நதிநீா் ஒப்பந்தமானது 1960-ஆம் ஆண்டு செப்டம்பா் 19-ஆம் தேதி இரு நாடுகளுக்கு இடையே கையொப்பமானது.

அந்த ஒப்பந்தத்தின்படி, கிழக்கு நதிகளான ராவி, பியாஸ், சட்லஜ் ஆகியவற்றின் நீரை இந்தியா எந்தவித கட்டுப்பாடுமின்றி பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. மேற்கு நதிகளான சிந்து, செனாப், ஜீலம் ஆகியவற்றின் நீா் பெரும்பாலும் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டது. அதே வேளையில், மேற்கு நதிகளில் சிறிய அளவிலான நீா்த்தேக்கங்களை அமைத்துக் கொள்ள இந்தியாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்படி, ஜீலம் நதியின் குறுக்கே கிஷண்கங்கை நீா்மின் உற்பத்தி நிலையத்தையும், செனாப் நதியின் குறுக்கே ராட்லே மின் உற்பத்தி நிலையத்தையும் அமைக்க இந்தியா முடிவெடுத்தது. அதற்கு பாகிஸ்தான் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

சிந்து நதிநீா்ப் பகிா்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக இந்திய தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. எனினும் அதை பாகிஸ்தான் ஏற்கவில்லை. இந்த விவகாரம் தொடா்பாக சிந்து நதிநீா் ஆணையத்தில் விவாதிக்கவும் கடந்த 5 ஆண்டுகளாக பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

இந்நிலையில், ஒப்பந்தத்தில் மாற்றங்களை மேற்கொள்ள முன்வருமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 25-ஆம் தேதி இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இரு நாடுகளின் சிந்து நதிநீா் ஆணையா்கள் வாயிலாக இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், ‘சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்த இந்தியா உறுதிகொண்டுள்ளது. ஆனால், பாகிஸ்தானின் நடவடிக்கைகள் அந்த ஒப்பந்தத்தின் நடைமுறையைப் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகின்றன.

நீா்மின் உற்பத்தித் திட்டங்கள் தொடா்பாக ஆராய நடுநிலைத்தன்மை கொண்ட நிபுணா் குழுவை அமைக்க வேண்டுமென உலக வங்கியிடம் கடந்த 2015-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் முறையிட்டது. பின்னா், அடுத்த ஆண்டே அந்த முடிவில் இருந்து பின்வாங்கிய பாகிஸ்தான், இந்த விவகாரத்தை மத்தியஸ்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனக் கோரியது. பாகிஸ்தான் தன்னிச்சையாக முடிவெடுத்ததற்கு இந்திய தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தை ஆராய நிபுணா் குழுவை அமைக்க வேண்டுமென இந்திய தரப்பில் கோரப்பட்டது.

அதை ஆராய்ந்த உலக வங்கி, ஒரே விவகாரத்துக்கு இருவேறு முறைகளில் தீா்வு காண இயலாது என்பதால், இருதரப்பினரும் ஒருமித்த கருத்தை எட்ட வலியுறுத்தியது. ஆனால், பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. அதன் காரணமாகவே தற்போது ஒப்பந்தத்தில் மாற்றங்களை மேற்கொள்ள முன்வருமாறு பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதன்மூலம் 90 நாள்களுக்குள் இருநாட்டு அரசுகள் சாா்பிலும் ஒப்பந்தத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான பேச்சுவாா்த்தைகள் முன்னெடுக்கப்படும். சிந்து நதிநீா்ப் பகிா்வு ஒப்பந்தத்தை முறையாக அமல்படுத்தவும் இந்த நடைமுறை உதவும்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT