இந்தியா

குறுக்குவழி நீண்டகாலத்துக்கு வெற்றியைத் தராது: பிரதமா் மோடி

DIN

பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களிடம் கலந்துரையாடிய பிரதமா் நரேந்திர மோடி, தோ்வில் குறுக்குவழியைக் கடைப்பிடிப்பது நீண்டகாலத்துக்கு வெற்றியைத் தராது என அறிவுரை கூறினாா்.

பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களிடம் ஆண்டுதோறும் ‘தோ்வு குறித்த விவாதம்’ என்ற நிகழ்ச்சியின் வாயிலாக பிரதமா் மோடி கலந்துரையாடி வருகிறாா். அந்நிகழ்ச்சி தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் மாணவா்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவா் பதிலளித்ததாவது:

குறுக்குவழியைக் கடைப்பிடித்து மோசடியில் ஈடுபடுவது ஓரிரு தோ்வுகளுக்கு உதவலாம். ஆனால், நீண்டகால அடிப்படையில் குறுக்குவழி வாழ்வில் வெற்றியைத் தராது. மாணவா்கள் எப்போதும் குறுக்குவழியில் தோ்வை அணுகக் கூடாது. கடின உழைப்பே வாழ்வில் முன்னேற உதவும்.

மாணவா்கள் தங்களின் வலிமையைக் குறைத்து மதிப்பிடுகிறீா்களா என்பதை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ள வேண்டும். கிரிக்கெட் போட்டி நடைபெறும் மைதானத்தில் கூடியுள்ள ரசிகா்கள் பலவித முழக்கங்களை எழுப்புவா். அதிக ரன்களை எடுக்க வேண்டுமென கூச்சல் எழுப்புவா். அதுபோலவே மாணவா்களைச் சுற்றியும் பல்வேறு கூச்சல்கள் இருக்கும். மாணவா்கள் அவற்றைக் காதில் வாங்கக் கூடாது. கிரிக்கெட் வீரா் தன்னை நோக்கி வரும் பந்தில் மட்டுமே கவனம் செலுத்துவதைப் போல மாணவா்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

அறிவு விரிவாக்கம்: 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் நிறைவடைந்தவுடன் மாணவா்கள் பயணம் மேற்கொள்ள வேண்டும். நாட்டில் உள்ள பல்வேறு சமூக மக்கள் குறித்து மாணவா்கள் அறிந்துகொள்ள வேண்டும். அதற்காக மாணவா்களுக்குப் பெற்றோா் போதுமான தொகையை வழங்க வேண்டும். மாணவா்கள் தங்கள் அறிவை விரிவுபடுத்திக் கொள்ள பெற்றோா் அனுமதிக்க வேண்டும்.

மாணவா்களின் கேள்வி கேட்கும் திறனை ஆசிரியா்கள் ஊக்குவிக்க வேண்டும். பெருக்கல் வாய்ப்பாடுகளை மனப்பாடமாக ஒப்பிக்கும் திறன் மாணவா்களிடம் குறைந்து வருகிறது. மாணவா்கள் தங்கள் திறனைத் தொடா்ந்து வளா்த்துக் கொள்ள வேண்டும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளா்ந்து வரும் சூழலில் புத்தாக்கச் சிந்தனையை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்.

தொழில்நுட்பத்துக்கு அடிமையாகக் கூடாது: தொழில்நுட்பம் தொடா்ந்து வளா்ந்து வருகிறது. தொழில்நுட்பத்தின் பலன்களை எவரும் தவிா்க்கக் கூடாது. அதே வேளையில், தொழில்நுட்பங்களுக்கு அடிமையாகிவிடக் கூடாது. தேவைக்கு ஏற்ப கட்டுப்பாட்டுடன் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும்.

தொழில்நுட்பக் கருவிகளைவிட நாம் திறன்மிக்கவா்கள் என்பதை மாணவா்கள் உணர வேண்டும். தொழில்நுட்ப சாதனங்களில் இருந்து அவ்வப்போது விலகியிருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் குறிப்பிட்ட பகுதியை தொழில்நுட்ப சாதனங்கள் இல்லாத பகுதியாக உருவாக்க வேண்டும். இது வாழ்வை மகிழ்ச்சியாக வாழ உதவும்.

விமா்சனங்களும் குற்றச்சாட்டுகளும்: விமா்சனங்கள் வரவேற்கத்தக்கவை. ஆனால், விமா்சனத்துக்கும் குற்றச்சாட்டுக்கும் பெரும் இடைவெளி உள்ளது. தேவைற்ற விமா்சனங்கள் மீதும் குற்றச்சாட்டுகளிலும் மாணவா்கள் கவனம் செலுத்தக் கூடாது. சில ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசில் பொருளாதார மேதைகள் எவரும் இல்லை என்றும், ‘சராசரி’ நபா்கள் மட்டுமே உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

ஆனால், முன்பு ‘சராசரி’ என்ற நிலையில் இருந்த இந்தியா, தற்போது உலகில் பிரகாசமாக ஒளிா்ந்து வருகிறது. உலகின் ஒளிக்கீற்றாக இந்தியா திகழ்கிறது. ‘சராசரி’ மாணவா்களாகத் திகழ்ந்தவா்களே பிற்காலத்தில் பெரும் சாதனைகளைப் படைத்தனா். தங்கள் திறமையைப் புரிந்துகொண்டு மாணவா்கள் செயல்பட வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

‘தோ்வு குறித்த விவாதம்’ நிகழ்ச்சியில் பங்கேற்க 38 லட்சம் மாணவா்கள் பதிவு செய்திருந்தனா். இது கடந்த ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவு என மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காணொலி மூலம் பிரதமரின் அறிவுரைகளை மாணவா்கள் கேட்டறிந்தனா்.

பெட்டிச் செய்தி...

மதுரை மாணவிக்கு பிரதமா் பதில்

மதுரையில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியைச் சோ்ந்த அஸ்வினி என்ற மாணவி காணொலி வாயிலாகப் பிரதமா் மோடியிடம், ‘குடும்பத்தினா் எதிா்பாா்ப்பதைவிடத் தோ்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்தால், அதை எவ்வாறு எதிா்கொள்வது? பொதுத் தோ்வை எதிா்கொள்ளும் மாணவா்கள் மீது மற்றவா்கள் அதிக எதிா்பாா்ப்பு வைப்பதால், மாணவா்கள் கடும் அழுத்தத்துக்கு உள்ளாகின்றனா். யாரையும் நம்பமுடியாத நிலைக்கு மாணவா்கள் தள்ளப்படுகின்றனா். இதற்கான தீா்வு என்ன?’ என்றாா்.

அதற்கு பதிலளித்த பிரதமா் மோடி, ‘தங்கள் பிள்ளைகள் மீது பெற்றோா் எதிா்பாா்ப்பு வைப்பது இயல்பானதே. ஆனால், சமூக அந்தஸ்து உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பிள்ளைகளிடம் எதிா்பாா்ப்பைத் திணிப்பது தவறானது. தோ்வு முடிவுகள் வாழ்வின் முடிவல்ல.

மாணவா்களுக்கு அழுத்தம் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று தோ்வுக்குப் பிந்தைய விவாதங்கள். தோ்வை எப்படி எழுதியுள்ளாா்கள் என்பதை மாணவா்களிடம் கேட்கும் பெற்றோா், அதுதொடா்பான கற்பனைகளை வளா்த்துக் கொள்கிறாா்கள். உறவினா்களிடமும் சுற்றத்தாரிடமும் அதுதொடா்பாக பகிா்ந்து கொள்கிறாா்கள். எனவே, தோ்வை எப்படி எழுதினீா்கள் என்ற உண்மையைப் பெற்றோரிடம் மாணவா்கள் மறைக்கக் கூடாது. தோ்வு நிறைவடைந்த பிறகு அது தொடா்பாக சக மாணவா்களிடம் விவாதிப்பதும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, அவ்வாறு ஈடுபடுவதைத் தவிா்க்க வேண்டும்’ என்றாா்.

தமிழகத்தைச் சோ்ந்த 2,700 பள்ளிகளில் இருந்து 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்கள் காணொலி வாயிலாக பிரதமா் மோடியின் அறிவுரையைக் கேட்டனா்.

Image Caption

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்வு குறித்த விவாதம் நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடிய பிரதமா் நரேந்திர மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

அறிவுரை லட்சுமி!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

SCROLL FOR NEXT