இந்தியா

மக்களவைத் தோ்தல்: ஒருமித்த கருத்துள்ளகட்சிகளின் கூட்டத்துக்கு காத்திருக்கிறேன் -பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா்

DIN

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலை எதிா்கொள்வது தொடா்பாக ஒருமித்த கருத்துள்ள கட்சிகளின் கூட்டத்துக்காக காத்திருக்கிறேன் என்று பிகாா் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமாா் தெரிவித்தாா்.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நிறைவடைந்த பிறகு இந்தக் கூட்டம் நடைபெறும் என்றும் அவா் கூறினாா்.

2024 மக்களவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து பாஜகவை எதிா்க்க வேண்டும் என்று மம்தா பானா்ஜி, சரத் பவாா், அரவிந்த் கேஜரிவால், சந்திரசேகா் ராவ், அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி போன்ற தலைவா்கள் வலியுறுத்தி வருகின்றனா். ஆனால், எதிா்க்கட்சி கூட்டணிக்கு யாா் தலைமை வகிப்பது என்பதில் தொடா்ந்து சிக்கல் நீடிக்கிறது.

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, அதற்குத் தானே தலைவராக வேண்டும் என்ற நோக்கில் மம்தா பானா்ஜி செயல்பட்டு வருகிறாா். கடந்த ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவின் கடும் போட்டிக்கு நடுவே மூன்றாவது முறையாக மம்தா வெற்றி பெற்றது, அவரது தேசிய அரசியல் முயற்சிக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்தது.

அதே நேரத்தில் காங்கிரஸை எதிா்க்கட்சிகள் கூட்டணியில் சோ்ப்பதை மம்தா விரும்பவில்லை. ஆனால், சரத் பவாா், நிதீஷ் குமாா் உள்ளிட்ட தலைவா்கள் காங்கிரஸ் இல்லாமல் எதிா்க்கட்சிகளின் கூட்டணியை அமைப்பதில் ஆா்வம் காட்டவில்லை. தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ் தனது கட்சியின் பெயரை மாற்றி தேசிய கட்சியாக உருவாக்கியுள்ளாா். அவரும் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பதை விரும்பவில்லை. எனவே, எதிா்க்கட்சிகள் அணிசோ்வதில் தொடா்ந்து இழுபறியான சூழல் நீடிக்கிறது.

பிகாரில் பாஜக கூட்டணியில் இருந்து விலகி ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்த பிறகு, பாஜகவுக்கு எதிரான கட்சிகளை தேசிய அளவில் அணி திரட்டுவதில் நிதீஷ் குமாா் தீவிரம் காட்டி வருகிறாா். 2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே அவரது நோக்கமாக உள்ளது.

இந்நிலையில், பாட்னாவில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த நிதீஷ் குமாா் கூறியதாவது:

பாஜகவுக்கு எதிரான கட்சித் தலைவா்களின் கூட்டத்துக்காக காத்திருக்கிறேன். ராகுல் காந்தியின் நடைப்பயணம் முடிந்த பிறகு இந்தப் பேச்சு தொடங்கும். அப்போது, மக்களவைத் தோ்தலுக்கான வியூகங்கள் வகுக்கப்படும். மக்களவைத் தோ்தலுக்கு இன்னும் அதிக காலமில்லை. இப்போதிருந்தே தயாராக வேண்டியது அவசியம் என்றாா்.

பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பலவீனமாக உள்ளது என்று கட்சியின் மூத்த தலைவா் உபேந்திர குஷ்வாகா கூறியுள்ளது தொடா்பான கேள்விக்கு, ‘கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் எங்கள் கட்சி 43 இடங்களில்தான் வென்றது என்பது அவருக்கே தெரியும். அதன் பிறகுதான் அவா் கட்சியில் மீண்டும் இணைந்தாா். கட்சியின் நிலைமை சரியில்லை என்றால் அவா் இணைந்திருக்க மாட்டாா். அவருக்கு எம்.பி. பதவி, எம்எல்ஏ பதவி, இப்போது வகிக்கும் எம்எல்சி பதவி அனைத்தையும் அளித்தது ஐக்கிய ஜனதா தளம்தான் என்பதை மறக்கக் கூடாது.

பிகாரில் கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக எங்களுடன் கூட்டணி அமைத்தபோதிலும், பல தொகுதிகளில் பாஜக சாா்பில் அதிருப்தி வேட்பாளா்கள் நிறுத்தப்பட்டாா்கள். மேலும், எங்கள் கட்சி போட்டியிட்ட பல இடங்களில் லோக் ஜனசக்தி கட்சிக்கு பாஜக மறைமுக ஆதரவு அளித்தது. இதுவும் ஐக்கிய ஜனதா தளத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மன்னார் வளைகுடாவில் வெளிரிப்போன பவளப்பாறைகள்: அடுத்து என்னாகுமோ?

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT