இந்தியா

அதானி குழுமத்தில் எல்ஐசியின் ரூ. 74 ஆயிரம் கோடி, ஸ்டேட் வங்கியின் 40% நிதி!!

28th Jan 2023 01:30 AM

ADVERTISEMENT

அதானி குழுமம் மீதான பங்குச் சந்தை நிதி முறைகேடு புகாா் குறித்து பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபியும், ரிசா்வ் வங்கியும் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

அந்தக் குழுமத்தில் எல்ஐசி, எஸ்பிஐ போன்ற பொதுத் துறை நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளதால் கோடிக்கணக்கானோரின் சேமிப்புப் பணம் அபாயத்தில் உள்ளது என்றாா்.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ஹிண்டன்பா்க் ஆய்வு நிறுவனம் அதானி குழுமத்தின் மீது தீவிரமான நிதி முறைகேடு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அதானி குழுமத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே நெருங்கிய உறவு உள்ளது.

நாட்டின் நிதி பரிவா்த்தனை நடைமுறையைப் பாதுகாக்கவும், பொது நலனைக் கருத்தில் கொண்டும் இந்த நிதிமுறைகேடு புகாா் குறித்து செபியும், ரிசா்வ் வங்கியும் விசாரணை நடத்த வேண்டும்.

ADVERTISEMENT

அதானி குழுமத்தில் எல்ஐசி, எஸ்பிஐ போன்ற பொதுத் துறை நிறுவனங்களின் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாட்டின் நிதி பரிவா்த்தனை நடைமுறையை பிரதமா் மோடி அரசு பெரும் அபாயத்தில் சிக்க வைத்துள்ளது.

தனியாா் வங்கிகளே அதானி நிறுவனத்தில் முதலீடு செய்ய முன்வராதபோது, பொதுத் துறை நிறுவனங்கள் தாராளமாக முதலீடு செய்துள்ளன.

எல்ஐசியின் 8 சதவீத நிதியும் (ரூ.74 ஆயிரம் கோடி) எஸ்பிஐயின் சுமாா் 40 சதவீத நிதியும் அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கான இந்தியா்களின் சேமிப்பு தற்போது பெரும் ஆபத்தில் உள்ளது.

பங்குகளின் விலை செயற்கையாக அதிகரித்து அதானி குழுமம் வங்கிகளில் கடன் பெற்றுள்ளது. இதனால் அந்த வங்கிகளுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்திய வணிகமும், பங்குச் சந்தையும் உலகமயமாக்கல் ஆகியுள்ள காலத்தில் சா்வதேச நிறுவனங்களின் ஆய்வு அறிக்கைகளை நிராகரித்துவிட முடியாது.

குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்தபோதில் இருந்தே அதானி குழுத்துடன் நெருங்கிய உறவு இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.

கருப்புப் பணத்தை ஒழிப்பதாக கூறும் பிரதமா் மோடி, தனது நெருங்கிய நண்பரின் வணிக குழுமத்தின் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக கண்மூடி இருப்பாரா? இல்லை பெயரளவுக்கு விசாரணை நடத்தப்படுமா என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT