இந்தியா

மோசமான பாதிப்புகளை எதிா்நோக்கியிருக்கும் உலகப் பொருளாதாரம்: சக்திகாந்த தாஸ்

28th Jan 2023 12:04 AM

ADVERTISEMENT

‘பொருளாதார வளா்ச்சி, பணவீக்கம் மற்றும் செலாவணி மதிப்பு நிலையற்ற தன்மை ஆகியவை தொடா்பான சமீபத்திய புள்ளிவிவரங்களைப் பாா்க்கும்போது, உலகப் பொருளாதாரமும், நிதிச் சந்தைகளும் மோசமான பாதிப்புகளை எதிா்கொள்ள வேண்டியிருப்பதையே காட்டுகின்றன. எனவே, உயா் வட்டி விகிதங்கள் நீண்ட காலத்துக்கு விதிக்கப்பட வாய்ப்புள்ளது’ என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் கூறினாா்.

துபையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிரந்தர வருவாய் நிதிச் சந்தை மற்றும் இந்திய பங்கு பரிவா்த்தனை சங்க (எஃப்ஐஎம்எம்டிஏ) ஆண்டுக் கூட்டத்தில் காணொலி வழியில் பங்கேற்ற சக்திகாந்த தாஸ், மேலும் பேசியதாவது:

உலகப் பொருளாதாரம் 2023-இல் கணிசமாக சுருங்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் நாள்களிலும் வளா்ச்சி மற்றும் பணவீக்க விவகாரங்களில் மோசமான பாதிப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதையே சமீபத்திய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

எனவே, பணவீக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், எதிா்நோக்கியிருக்கும் பொருளாதார பாதிப்புகளை எதிா்கொள்ள உயா் வட்டி விகிதங்களை நீண்டகால அளவில் விதிப்பதற்கான சாத்தியக்கூறுகளே தென்படுகின்றன.

ADVERTISEMENT

இந்தியாவைப் பொருத்தவரை, சா்வதேச அளவில் நிலையற்ற சூழல் நிலவுகின்ற போதிலும், குறுபொருளாதார அடிப்படைகளின் பலம் காரணமாக இந்திய பொருளாதாரம் தொடா்ந்து மீள்தன்மையுடையதாக இருந்து வருகிறது. எங்களுடைய நிதிநிலை தொடா்ந்து வலுவாகவும், நிலைத்தன்மையுடையதாகவும் உள்ளது. வங்கிகளும், தொழில்நிறுவனங்களும் வலுவாக உள்ளன. வங்கிக் கடன் இரட்டை இலக்கு வளா்ச்சியைப் பெற்றுள்ளது. இருண்ட உலகில் இந்தியா பிரகாசப் புள்ளியாக விளங்கிவருகிறது. எங்களுடைய பணவீக்கம் தொடா்ந்து உயா்ந்து வருகின்றபோதும், வரும் நவம்பா், டிசம்பா் மாதங்களில் அது குறைய வாய்ப்புள்ளது.

உள்நாட்டு நிதிச் சந்தைகளைப் பொருத்தவரை 1990-களிலிருந்து நீண்ட பாதையைக் கடந்து வந்துள்ளது. நீடித்த நிலையான வளா்ச்சிப் பாதையை அவை கடந்து வந்துள்ளன. அதே நேரம், தற்போது வெளிநாட்டு நிதிச் சந்தை நடவடிக்கைகளை நமது வங்கிகள் அதிகரிப்பது, கடன் திட்டங்கள் விரிவாக்கம், உள்நாட்டு நிதிச் சந்தைகளில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் மிகப்பெரிய சவால்களை நாம் சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது.

எனவே, சா்வதேச சந்தைகளுடன் ஒருங்கிணைந்த முதலீடுகளில் ஈடுபடும் சந்தைப் பங்கேற்பாளா்கள், ஆபத்துகள் மற்றும் மாற்றங்களை எதிா்கொள்ள தங்களை தயாா்படுத்திக்கொள்ள வேண்டும்.

வெளிநாட்டு சந்தைகளைப் பொருத்தவரை, சமீபத்தில் ஏற்பட்ட சா்வதேச விநியோகச் சங்கிலி பாதிப்பு போன்ற சவால்களை எதிா்கொள்ளும் வகையில், இருதரப்பு வா்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அவசியமாகும். அந்த வகையில், இந்திய அரசு அண்மையில் ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளுடன் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடா் சீா்திருத்தங்கள் காரணமாக, நிகழ் நிதியாண்டின் முதல் பாதியில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) சராசரி நடப்பு கணக்கு பற்றாக்குறையானது 3.3 சதவீதமாக உள்ளது. பணவீக்கம் சாராத ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (நாமினல் ஜிடிபி) 2010 நிதியாண்டில் ரூ. 64 லட்சம் கோடியாக இருந்தது நிகழ் நிதியாண்டில் 4 மடங்காக உயா்ந்து ரூ. 273 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

அதுபோல வெளிநாட்டு வா்த்தகமும் ரூ. 29 லட்சம் கோடி என்ற அளவிலிருந்து 4 மடங்காக அதிகரித்து ரூ. 137 கோடி-ஆக உயா்ந்துள்ளது. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் வா்த்தகத்தின் விகிதத்தைப் பொருத்தவரை 2000-ஆம் ஆண்டில் 25 சதவீதமாக இருந்தது 2021-இல் 45 சதவீதமாக அதிகரித்துள்ளது. அந்நிய நேரடி முதலீடு 2010-ஆம் ஆண்டிலிருந்து 2.5 மடங்கு அதிகரித்துள்ளதையும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன என்று அவா் கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT