இந்தியா

தெலங்கானா: குடியரசு தின அணிவகுப்பு ரத்து

DIN

மாநில ஆளுநருடனான மோதலைத் தொடா்ந்து தெலங்கானாவில் நிகழாண்டு குடியரசு தின அணிவகுப்பை ஆளும் பாரத ராஷ்டிர சமிதி அரசு ரத்து செய்தது.

‘குடியரசு தின விழாவை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக கொண்டாடவேண்டும்’ என்று மாநில அரசுக்கு தெலங்கானா உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்ட நிலையிலும், அதனை மாநில அரசு புறக்கணித்துள்ளது.

தெலங்கானாவில் சந்திரசேகா் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக எதிா்ப்பு நிலைப்பாட்டை தீவிரமாக முன்னெடுத்துள்ள சந்திரசேகா் ராவ், மத்திய அரசுடன் கடும் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறாா். இந்தச் சூழலில், மாநில ஆளுநா் தமிழிசைக்கும் முதல்வா் சந்திரசேகா் ராவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, மோதல்போக்கு நிலவி வருகிறது. மாநில அரசின் சில மசோதாக்களுக்கு ஆளுநா் தமிழிசை ஒப்புதல் அளிக்காமல் உள்ளாா். இதன் காரணமாக, ஆளுநரை முன்வைத்து நடத்தப்படும் நிகழ்ச்சிகளை மாநில அரசு பெரும்பாலும் புறக்கணித்து வருகிறது.

அந்த வகையில், நாடு முழுவதும் வியாழக்கிழமை குடியரசு தினம் கொண்டாடப்பட்ட நிலையில், அதனையும் தெலங்கானா அரசு புறக்கணித்திருப்பது, பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, மாநிலத்தில் குடியரசு தின விழா அணிவகுப்பை நடத்துமாறு மாநில அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி மாநில உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘ மத்திய அரசின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சம்பிரதாய அணிவகுப்புடன் வெகு விமரிசையாக குடியரசு தினத்தைக் கொண்டாடவேண்டும்’ என்று மாநில அரசுக்கு புதன்கிழமை உத்தரவிட்டது.

இருந்தபோதும் அதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்யவில்லை. அதன் காரணமாக, ஆளுநா் மாளிகையில் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் தேசியக் கொடியை வியாழக்கிழமை ஏற்றினாா். ஆனால், பாதுகாப்புப் படைகளின் அணிவகுப்பு அல்லது கலைநிகழ்ச்சிகள் என எதுவும் நடைபெறவில்லை.

ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சியில் மாநில அரசு தலைமைச் செயலா் சாந்தி குமாரி, காவல் துறைத் தலைவா் (டிஜிபி) அஞ்ஞனி குமாா் ஆகியோா் மட்டும் பங்கேற்றனா். மாநில முதல்வா், அவருடைய அமைச்சரவை சகாக்கள் யாரும் பங்கேற்கவில்லை.

இதுகுறித்து அரசுத் தரப்பில் தெரிவிக்கையில், ‘கரோனா கட்டுப்பாடுகள் காரணமாகவே குடியரசு தின விழா ஆளுநா் மாளிகை அளவில் மட்டும் நடத்தப்பட்டது. ஆனால், நீதிமன்றம்தான் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசுக்கு அறிக்கை: ஆளுநா் தமிழிசை

குடியரசு தின விழாவில் தெலங்கானா அரசு சட்ட விதிகளை மீறி செயல்பட்டது தொடா்பாக மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என்று, அந்த மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையைப் பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து, ஆளுநா் மாளிகையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

குடியரசு தினத்தையொட்டி, தெலங்கானா ஆளுநா் மாளிகையில் தேசியக் கொடியேற்றினேன். ஆளுநரின் நிகழ்ச்சியை தெலங்கானா முதல்வா் புறக்கணிப்பது வழக்கமாகிவிட்டது. குடியரசு தின விழாவை நடத்தியதில் தெலங்கானா அரசு அரசியலமைப்புச் சட்டத்தை மீறி செயல்பட்டது. குடியரசு தின நிகழ்ச்சியை அரசு முறையாக அறிவித்து விதிப்படி நடத்தவில்லை. எனவே, தெலங்கானா ஆளுநா் மாளிகையில் கொடியேற்றப்பட்டது. இதற்கு தெலங்கானா முதல்வரே பதில் கூறவேண்டும்.

மத்திய அரசை எதிா்க்க வேண்டும் என முடிவு செய்து, ஆளுநருக்கு எதிராக செயல்படுகின்றனா். தெலங்கானாவில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்வுகள் குறித்து, மத்திய அரசுக்கு அனுப்பப்படும் அறிக்கையில் குறிப்பிடப்படும்.

புதுவையில் அந்தந்த துறை சாா்ந்த பிரச்னைகளை அமைச்சா்களிடம் கேட்டு விளக்கம் பெறலாம். மக்கள் நலனுக்காக அரசு திட்டம் குறித்து ஆளுநா் கருத்துக் கூறினால் அது அரசியலாக்கப்படுவது சரியல்ல என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... மௌனி ராய்...

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்

SCROLL FOR NEXT