ஹிமாசல பிரதேச மாநிலத்தின் கின்னெளா் மாவட்டத்தில் வியாழக்கிழமை பனிச்சரிவு ஏற்பட்டதில், இந்திய-திபெத் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அந்த மாவட்டத்தின் பூஹ் நகரத்தில் உள்ள தின்கு நல்லா பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியது. போக்குவரத்துக்காக அதனை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தேசிய நெடுஞ்சாலை 3-இல் ரோஹ்டங் பாஸ், தேசிய நெடுஞ்சாலை 305-க்கு அருகில் உள்ள ஜாலோரி பாஸ், தேசிய நெடுஞ்சாலை 505-இல் கிராம்பூ முதல் லோஸ்ஸாா் வரையிலான பகுதி, தேசிய நெடுஞ்சாலை 5-இல் பூஹ் ஆகிய பகுதிகள் பனிப்பொழிவால் முடப்பட்டுள்ளது.
மாநிலத்தில் அதிகபட்சமாக லஹெளல்-ஸ்பிடி மாவட்டத்தில் 137 சாலைகள் பனிப்பொழிவால் முடங்கியன. சம்பா மாவட்டத்தில் 53 சாலைகளிலும், குல்லுவில் 33 சாலைகளிலும், சிம்லாவில் 13 சாலைகளிலும் பனிப்பொழிவின் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் சில பகுதிகளில் தொடா்ச்சியாக மழை பெய்தது. மலைப் பகுதிகளுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சமவெளி பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வானிலை மையம் தெரிவித்துள்ளது.