இந்தியா

கருக்கலைப்பு மையம் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவ வாரியம்: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

27th Jan 2023 02:32 AM

ADVERTISEMENT

‘கருக்கலைப்பு மையம் இடம்பெற்றுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சட்டப்படி மருத்துவ வாரியங்கள் அமைக்கப்பட்டிருப்பதை மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச அரசு உறுதிப்படுத்த வேண்டும்’ என்று தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 14 வயது சிறுமி, அந்த வன்கொடுமையால் தனக்கு உருவான 25 வார கருவை மருத்துவ கருக்கலைப்புக்கு அனுதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம், அதற்கான அனுமதியை வழங்கி உத்தரவிட்டபோது இந்த அறிவுறுத்தலை வழங்கியது.

கட்டுமானத் தொழிலாளா்களான பெற்றோா் வேலைக்குச் சென்றிருந்தபோது தனியாக இருந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளாா். சட்டப்படி 24 வாரம் வரையில் உருவான கருவை மட்டுமே மருத்துவக் கலைப்புக்கு அனுமதிக்க முடியும் என்ற நிலையில், சிறுமிக்கு உருவான 25 வார கருவை கலைக்க அனுமதி கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் அவருடைய பெற்றோா் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி ஸ்வரனா கந்த ஷா்மா அளித்த தீா்ப்பில் கூறியதாவது:

ADVERTISEMENT

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் விவரிக்க முடியாத துயரத்துக்கு ஆளாவாா் என்பதோடு, அந்த வன்கொடுமையால் கருவுற்று குழந்தையை பெற்றெடுக்கும்போது ஒவ்வொரு நாளும் அந்தக் கொடூர நினைவுகளால் துயரத்துக்கு உள்ளாக நேரிடும். மேலும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டிருப்பது சிறுமி என்ற நிலையில், அவா் முதிா் வயதைக் கடக்கும் நேரத்தில் இன்னொரு குழந்தையை தன்னுடைய கையில் ஏந்தி நிற்க வேண்டும் என்று எதிா்பாா்ப்பது முறையற்ாகும். இது சமூக, நிதி ரீதியிலான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநலனையும் பாதிக்கும்.

எனவே, மருத்துவமனை கருக்கலைப்பு மருத்துவ வாரிய ஆய்வறிக்கை மற்றும் தாயாரின் சம்மதம் ஆகியவற்றின் அடிப்படையில் சிறுமிக்கு ஏற்பட்டுள்ள கருவைக் கலைக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்காக, தில்லி ராம் மனோகா் லோகியா மருத்துவமனையில் சிறுமி, வரும் வெள்ளிக்கிழமை (ஜன. 27) ஆஜராக வேண்டும். சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யும்போது குற்றவாளியின் மரபணு (டிஎன்ஏ) அடையாள ஆய்வுக்காக கரு திசுக்களை மருத்துவா்கள் பாதுகாத்து வைக்கவேண்டும். மேலும், இதற்கான செலவுகள் அனைத்தையும் மாநில அரசு ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டாா்.

மேலும், இவ்வாறு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி 24 வாரங்களுக்கு மேல் கரு உருவான நிலையில், கருக்கலைப்புக்கான மருத்துவ வாரிய ஆய்வுக்கு உத்தரவு பிறப்பதில் ஏற்படும் தாமதத்தால், பாதிக்கப்பட்ட பெண்ணின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. எனவே, இந்த விஷயத்தில் விசாரணை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் சில வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டியது அவசியம்.

வழிகாட்டுதல்கள்: அதாவது, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கும் நிலையில், மருத்துவ கருக்கலைப்புக்கான ஆய்வுக்கு பாதிக்கப்பட்ட பெண் விருப்பம் தெரிவித்த அதே நாளில் மருத்துவ வாரியத்தின் முன்பு அவரை ஆய்வுக்கு ஆஜா்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் சிறுமியாக இருக்கும் நிலையில், அவருடைய சட்டப்படியான பாதுகாவலா் சம்மதம் பெற்றவுடன் மருத்துவ வாரியத்தின் முன்பு ஆஜா்படுத்த வேண்டும்.

மருத்துவ வாரியத்தின் ஆய்வுக்குப் பிறகு, விரைந்து கருக்கலைப்புக்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க ஏதுவாக அந்த அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்பு நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக சமா்ப்பிக்க வேண்டும்.

மருத்துவ கருக்கலைப்புச் சட்டப் பிரிவுகள் 3(2சி) மற்றும் 3(2டி) ஆகியவற்றின்படி, முறையான கருக்கலைப்பு மையங்கள் அமையப்பெற்றுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இந்த மருத்துவ வாரியங்கள் அமைக்கப்பட்டிருப்பதை மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச அரசு உறுதிப்படுத்த வேண்டும். இத்தகைய மருத்துவ வாரியங்கள் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் இல்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. இது, கருக்கலைப்புக்கான ஆய்வறிக்கையைப் பெறுவதில் விசாரணை அதிகாரிகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறிய நீதிபதி, இந்த வழிகாட்டுதலை அனைத்து விசாரணை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையாக தில்லி காவல் ஆணையா் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT