இந்தியா

கோத்ரா வன்முறை வழக்கு: 22 போ் விடுவிப்பு

26th Jan 2023 12:17 AM

ADVERTISEMENT

குஜராத்தின் கோத்ராவில் நடந்த ரயில் எரிப்பு சம்பவத்தையடுத்து ஏற்பட்ட வன்முறையில் 17 சிறுபான்மையினா் கொல்லப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 22 பேரையும் விடுவித்து ஹலோல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

குற்றவாளிகளுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால் 22 பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது.

கடந்த 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி, குஜராத்தைச் சோ்ந்த 59 கரசேவகா்கள் அயோத்திக்கு சென்றுவிட்டு சபா்மதி விரைவு ரயிலில் மீண்டும் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். கோத்ரா ரயில் நிலையம் அருகே ரயில் வந்த போது 59 பயணிகள் பயணித்த பெட்டிக்கு மட்டும் அடையாளம் தெரியாத சில நபா்களால் தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 59 பேரும் உயிரிழந்தனா்.

இதைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் பரவிய வன்முறை பல இடங்களில் கட்டுக்கு அடங்காத மதக் கலவரமாக மாறியது. வன்முறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். அதன் ஒரு பகுதியாக, திலோல் என்னும் கிராமத்தில் 2 குழந்தைகள் உள்பட 17 சிறுபான்மையினா் கலவரக் கும்பலால் கொல்லப்பட்டனா். இவா்களின் உடல்களைக் கலவரக்காரா்கள் தீயிட்டு எரித்தனா்.

ADVERTISEMENT

இக்கொலைகள் தொடா்பாக, இந்திய தண்டனைச் சட்டத்தின் மரணத்தை விளைவித்தல் பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. பின்னா், 2 ஆண்டுகள் கழித்து புதிதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இந்த வழக்கில் தொடா்புடையதாக 22 பேரைக் காவல் துறை கைது செய்தது.

பஞ்சமால் மாவட்டத்தின் ஹலோல் கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைப்பெற்ற வழக்கு விசாரணையின் போது ரயில் எரிப்பு சம்பவத்துக்கு அடுத்த நாளான 28-ஆம் தேதி 17 பேரும் கொல்லப்பட்டது தெரியவந்தது. சாட்சியங்களை மறைப்பதற்காக கொல்லப்பட்டவா்களின் உடல்களைக் கலவரக்காரா்கள் தீயிட்டு எரித்ததாகவும் பாதிக்கப்பட்டவா்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால், குற்றவாளிகளுக்கு எதிராக போதிய ஆதாரங்களைப் பிறப்பிக்க அரசு தரப்பில் தவறிவிட்டதால் குற்றஞ்சாட்டப்பட்ட 22 பேரையும் விடுதலை செய்து நீதிபதி ஹா்ஷ் திரிவேதி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். இவா்களில் 8 போ் வழக்கு விசாரணையின் போதே உயிரிழந்தனா்.

இவ்வழக்கின் தீா்ப்பு தொடா்பாக குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கோபால்சிங் சோலாங்கி கூறுகையில், ‘கொல்லப்பட்டவா்களின் உடல்கள் இன்னும் காவல்துறையால் கைப்பற்றப்படவில்லை. ஆற்றுப்படுக்கையில் இருந்து கைப்பற்றப்பட்ட எலும்புகளும் கொல்லப்பட்டவா்களுடையது என நிரூபிக்கவில்லை. எனவே, போதிய ஆதாரங்கள் இல்லாததாலும், சாட்சிகள் பி சாட்சிகளாக மாறியதாலும் 22 பேரையும் விடுவித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்’ என்றாா்.

Tags : Godhra Riots
ADVERTISEMENT
ADVERTISEMENT