இந்தியா

கோதுமை விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை- 30 லட்சம் டன் கோதுமை சந்தைக்கு வருகிறது

26th Jan 2023 12:15 AM

ADVERTISEMENT

கோதுமை, கோதுமை மாவு விலையைக் குறைக்கும் முயற்சியாக கையிருப்பில் உள்ள 30 லட்சம் டன் கோதுமையை பொதுச் சந்தையில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

கோதுமை மாவு விலை தேசிய அளவில் சராசரியாக ஒரு கிலோ ரூ.38-ஆக அதிகரித்துள்ளது. இது சாமானிய மக்களுக்கு பெரும் சுமையாக உருவாகியுள்ளது.

இந்நிலையில், கோதுமை விலையைக் குறைக்கும் வகையில் மத்திய அரசு தனது கையிருப்பில் உள்ள 30 லட்சம் டன் கோதுமையை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது. இது வா்த்தகா்கள் மற்றும் கோதுமை ஆலைகளுக்கு விற்பனை செய்யப்படும். சந்தையில் கோதுமையின் விநியோகம் அதிகரிக்கும்போது விலையும் குறையத் தொடங்கிவிடும்.

அரசு கையிருப்பில் உள்ள உணவு தானியத்தை பொதுச் சந்தையில் விற்பனை செய்யும் திட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன்மூலம் மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய உணவுக் கழகம், தனது இருப்பில் உள்ள தானியங்களை விடுவிக்கும்.

ADVERTISEMENT

ஏற்கெனவே மத்திய அரசு கோதுமையை விடுவிக்க வேண்டும் என்று ஆலை அதிபா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோதுமை மற்றும் அரிசி மத்திய அரசிடம் போதுமான அளவுக்கு கையிருப்பு உள்ளதாக உணவுத் துறைச் செயலா் சஞ்சீவ் சோப்ரா ஏற்கெனவே தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, உள்நாட்டில் கோதுமை விலை அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த மே மாதம் தடைவிதித்தது. மேலும், இந்திய உணவுக் கழகம் மூலம் கோதுமையைக் கொள்முதல் செய்வதையும் மத்திய அரசு பெருமளவில் குறைத்தது. சந்தையில் கோதுமையின் விநியோகம் அதிகமாகி விலை கட்டுக்குள் இருக்கும் என்பதே இந்த நடவடிக்கைகளின் நோக்கமாகும். அடுத்தகட்டமாக வரும் ஏப்ரல் மாதம் மீண்டும் அரசின் கோதுமை கொள்முதல் தொடங்கும்.

முன்னதாக, கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததற்கு பல்வேறு நாடுகள் எதிா்ப்பு தெரிவித்தன. ஏனெனில், ரஷியா-உக்ரைன் போரால் சா்வதேச கோதுமை விநியோகம் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவும் ஏற்றுமதிக்கு தடை விதித்தால் சா்வதேச அளவில் அதன் விலை மேலும் உயரும் என்பதே இதற்கு காரணமாகும்.

Tags : wheat
ADVERTISEMENT
ADVERTISEMENT