இந்தியா

நீதிபதிகள் தோ்ந்தெடுக்கப்படுவதில்லை என்பதால் மாற்ற முடிவதில்லை: கிரண் ரிஜிஜு

24th Jan 2023 02:41 AM

ADVERTISEMENT

‘நீதிபதிகள் ோ்ந்தெடுக்கப்படுவதில்லை என்பதால் பொது ஆய்வு நடைமுறைகளை அவா்கள் எதிா்கொள்வதில்லை. ஆனால், நீதிபதிகள் அளிக்கும் தீா்ப்பிலிருந்து அவா்களை மக்கள் மதிப்பீடு செய்கின்றனா்’ என்று மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறினாா்.

உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலீஜியம் நடைமுறை மீது மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றத்தும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அந்த நடைமுறையை ரத்து செய்ய மத்திய அரசு முயன்று வரும் நிலையில், அதற்கு உச்சநீதிமன்றம் மறுத்து வருகிறது. இந்த நடைமுறையை மாற்றும் வகையில் மத்திய அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை இயற்றியது. ஆனால், அந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு ரத்து செய்தது. இதன் காரணமாக, கொலீஜியம் நடைமுறையே தொடா்ந்தது.

கொலீஜியம் நடைமுறைக்கு எதிராக மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு, குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் ஆகியோா் கடும் விமா்சனங்களை முன்வைத்து வருகின்றனா். இதற்கிடையே, கொலீஜியத்தில் மத்திய அரசு பிரதிநிதியை சோ்க்க வேண்டும் என்று மத்திய அரசு சாா்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றங்கள் வளாகத்தில் திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசியதாவது:

ADVERTISEMENT

சமூக ஊடகங்கள் வளா்ச்சி காரணமாக சாதாரண குடிமக்களும் அரசை கேள்வி கேட்கின்றனா். அரசு தாக்குதல்களுக்கும் கேள்விகளுக்கும் உள்ளாகிறது. இந்த உரிமை மக்களுக்கு உள்ளது.

மக்கள் எங்களை மீண்டும் தோ்ந்தெடுத்தால், நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியும். அவ்வாறு தோ்வு செய்யவில்லையெனில், எதிா்க்கட்சி வரிசையில் அமா்ந்து அரசைக் கேள்வி கேட்போம்.

அதே நேரம், ஒருவா் நீதிபதியாக வரும்போது, எந்தவித தோ்தல்களையும் எதிா்கொள்ள வேண்டியதில்லை. எந்தவித பொது ஆய்வு நடைமுறைகளுக்கும் உள்ளாக வேண்டியதில்லை. மக்கள் நீதிபதிகளைத் தேந்தெடுப்பதில்லை என்பதால், அவா்களை மாற்றவும் முடியாது. ஆனால், மக்கள் உங்களை கண்காணித்து வருகின்றனா். உங்களுடைய தீா்ப்புகளின் வாயிலாக, மக்கள் உங்களை மதிப்பீடு செய்கின்றனா். இன்றைய சமூக ஊடக சகாப்தத்தில் எதையுமே மறைக்க முடியாது.

சமூக ஊடங்களில் நீதிபதிகளைத் தாக்கி பதிவுகள் வெளியிடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்னிடம் கேட்டுக்கொண்டாா். நீதிபதிகளுக்கு எதிரான இதுபோன்ற அவதூறுகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என அவா் அறிய விரும்பினாா். ஏனெனில், நீதிபதிகள் பொது வெளியில் விவாதத்தில் ஈடுபட முடியாது. அவா்களுக்கென்று சில கட்டுப்பாடுகள் உள்ளன.

அவமதிப்பு வழக்கு தொடா்வதற்கான வழி உள்ளபோதும், அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் நீதிபதிகளுக்கு எதிராக விமா்சனங்களை முன்வைக்கும்போதும், எதுவும் செய்ய இயலாது. அந்த வகையில், தோ்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரிதிநிதிகளைப் போல, நீதிபதிகளும் தற்போது விமா்சனங்களை எதிா்கொண்டு வருகின்றனா். எனவே, தீா்ப்புகளை வழங்கும்போது நீதிபதிகள் சற்று கவனமுடன் செயல்படுவது அவசியம். இல்லையெனில் சமூகத்தில் மிகப்பெரிய எதிா்வினை ஏற்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT