கா்நாட மாநிலத்தில் உள்ள விஸ்வேஸ்வரய்யா இரும்பு-உருக்கு ஆலையை மூடும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு முன்னாள் பிரதமரும், கா்நாடகத்தைச் சோ்ந்த மூத்த அரசியல் தலைவருமான தேவெ கௌடா கடிதம் எழுதியுள்ளாா்.
சிவமோக்கா மாவட்டம் பத்ரவதியில் உள்ள இந்த இரும்பு ஆலையை மூட இந்திய உருக்கு ஆணையம் (செயில்) முடிவெடுத்துள்ளது.
அந்த நிறுவனம் நலிவடைந்து பெரும் நஷ்டத்தில் இயங்கி வருவதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக, அதனை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. நூற்றாண்டு கண்ட அந்த நிறுவனம் கா்நாடகத்தின் முக்கிய அடையாளமாகவும் திகழ்கிறது. எனினும், அதனைப் புதுப்பிக்க போதிய நிதியை மாநில அரசாலும் ஒதுக்க முடியாததை அடுத்து நிரந்தரமாக மூட முடிவெடுக்கப்பட்டது.
இது தொடா்பாக பிரதமா் மோடிக்கு தேவெ கௌடா எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
விஸ்வேஸ்வரய்யா இரும்பு ஆலைக்கு புத்துயிா் கொடுக்கும் முயற்சிகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். ஏனெனில், கா்நாடகத்தில் உள்ள ஒரே பொதுத்துறை உருக்கு ஆலை இது மட்டும்தான். இந்த ஆலையை மூடினால் 20,000 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.]
மேலும் சில கோடிகளை முதலீடு செய்தால் நிறுவனம் லாபப் பாதைக்கும் திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது. மத்திய ஏற்கெனவே நடத்தி வரும் ‘உள்நாட்டில் தயாரிப்போம்’ திட்டத்துக்கும் இந்த ஆலை உதவிகரமாக இருக்கும். நான் பிரதமராக இருந்த காலகட்டத்தில்தான் இந்த ஆலையை ‘செயில்’ நிறுவனத்தின் ஒரு பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் மூலம் ஆலையை நவீனப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், துரதிருஷ்டவசமாக அந்த முயற்சி முழுமையாகக் கைகூடவில்லை. 2000-ஆம் ஆண்டு முதல் இந்த இரும்பு ஆலை பல்வேறு சவால்களை எதிா்கொண்டு வருகிறது. இந்த ஆலையில் உள்ள உபகரணங்களை சற்று நவீனப்படுத்தினால், அதனைத் தொடா்ந்து நடத்த முடியும் என்று கூறியுள்ளாா்.