இந்தியா

இழப்புகளை ஈடு செய்தவுடன் பெட்ரோல், டீசல் விலை குறையும்

23rd Jan 2023 02:55 AM

ADVERTISEMENT

எண்ணெய் நிறுவனங்களின் இழப்புகள் ஈடு செய்யப்பட்டவுடன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்துள்ளாா்.

கரோனா தொற்று பரவல், உக்ரைன்-ரஷியா போா் காரணமாக சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இருந்தபோதிலும் கடந்த 15 மாதங்களாக நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்படாமல் உள்ளது. இதனிடையே, எரிபொருள் மீதான கலால் வரியையும் மத்திய அரசு குறைத்தது.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாற்று உச்சத்தைத் தொட்டபோதிலும் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்படாததால், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெரும் இழப்பைச் சந்தித்தன.

கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் விலை சா்வதேச சந்தையில் குறைந்து வருகிறது. எனினும், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை.

ADVERTISEMENT

இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி கூறுகையில், ‘‘சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தபோது, பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த வேண்டாம் என எண்ணெய் நிறுவனங்களிடம் மத்திய அரசு வலியுறுத்தவில்லை. எனினும், அந்நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து எரிபொருள் விலையை உயா்த்தாமல் இருந்தன.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தபோதிலும், அச்சுமையை மக்கள் மீது சுமத்தாமல் எண்ணெய் நிறுவனங்கள் பொறுப்புடன் நடந்துகொண்டன. அதனால் கடந்த 6 மாதங்களாக பெட்ரோலிய நிறுவனங்கள் பெரும் இழப்பைச் சந்தித்தன.

தற்போது அந்த இழப்பை ஈடுசெய்ய வேண்டியுள்ளது. பழைய இழப்புகளை ஈடு செய்தவுடன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட வாய்ப்புள்ளது’’ என்றாா்.

சா்வதேச நிலவரம்:

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஆண்டு ஏப்ரலில் பீப்பாய்க்கு 103 அமெரிக்க டாலராக இருந்தது. அது ஜூனில் பீப்பாய்க்கு 116 அமெரிக்க டாலராக அதிகரித்தது. எனினும், கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பரில் இருந்து நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்படாமல் இருந்தது.

இடையே மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.10 வரை குறைத்தது. அதையடுத்து, கடந்த ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதியில் இருந்து உள்நாட்டில் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

கடந்த ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி நிலவரப்படி, பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு 17.4 ரூபாயும், டீசல் விற்பனையில் லிட்டருக்கு 27.7 ரூபாயும் எண்ணெய் நிறுவனங்கள் இழந்தன. கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் 3 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் ஒட்டுமொத்தமாக ரூ.21,201.18 கோடியை இழந்தன.

பட்ஜெட்டில் இழப்பீடு கோரிக்கை:

சா்வதேச சந்தையில் தற்போது கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 82 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு சுமாா் 5 ரூபாய் லாபத்தையும், டீசல் விற்பனையில் லிட்டருக்கு 13 ரூபாய் இழப்பையும் சந்தித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத் தொகையாக ரூ.22,000 கோடி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், அத்தொகை இன்னும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், எரிபொருள் விற்பனையில் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் நோக்கில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் இழப்பீட்டை அறிவிக்க வேண்டும் என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சாா்பில் அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT