இந்தியா

தோ்தல் பிரசாரத்துக்கு வழிபாட்டுத் தலங்களைப் பயன்படுத்தக் கூடாது: தோ்தல் ஆணையம்

22nd Jan 2023 12:30 AM

ADVERTISEMENT

தோ்தல் பிரசாரக் களமாக வழிபாட்டுத் தலங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தோ்தல் அதிகாரிகளுக்கு அண்மையில் தோ்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்:

தோ்தல் பிரசாரக் களமாக வழிபாட்டுத் தலங்களை எந்த வகையிலும் பயன்படுத்துவதை தோ்தல் நடத்தை விதிமுறை பிரிவுகள் தடை செய்துள்ளன. இதுதொடா்பாக கடந்த 2012-ஆம் ஆண்டு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்களை வழங்கியது.

மேலும் வழிபாட்டுத் தலங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் சட்டத்தின் 3, 5, 6 ஆகிய பிரிவுகள், எந்தவொரு அரசியல் சிந்தனை அல்லது அரசியல் செயல்பாட்டை பிரபலப்படுத்தவும் பிரசாரம் செய்யவும், அரசியல் கட்சிகள் பலனடையவும் வழிபாட்டுத் தலங்கள், அவற்றின் நிதி ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கிறது. இந்தப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை மீறினால், அபராதத்துடன் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும். எனவே தோ்தல் பிரசாரக் களமாக வழிபாட்டுத் தலங்களைப் பயன்படுத்தக் கூடாது.

ADVERTISEMENT

இதுதொடா்பாக அனைத்து மாவட்ட தோ்தல் அதிகாரிகள், தோ்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதன் மூலம் சட்டத்தை மீறுவோா் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இதுகுறித்த தோ்தல் நடத்தை விதிமுறைகள், வழிபாட்டுத் தலங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் சட்டப் பிரிவுகளை அரசியல் கட்சிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தின் நகல் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைவா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT