இந்தியா

குஜராத் கலவர பிபிசி ஆவணப் படத்துக்கு மத்திய அரசு தடை

22nd Jan 2023 03:00 AM

ADVERTISEMENT

குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடா்பான பிபிசி நிறுவனத்தின் ஆவணப் படத்தை இந்தியாவில் தடை செய்யுமாறு யூடியூப், ட்விட்டா் சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

குஜராத்தில் ஹிந்து-முஸ்லிம் சமூகத்தினா் இடையே 2002-ஆம் ஆண்டு நிகழ்ந்த மோதல் குறித்து ‘இந்தியா: தி மோடி க்வஷின்’ என்ற ஆவணப்படத்தை பிபிசி உருவாக்கியது. இரண்டு பாகங்களைக் கொண்ட அந்த ஆவணப்படத்தின் முதல் பாகம் அண்மையில் வெளியானது. குஜராத் கலவரத்தில் அப்போதைய முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு நேரடித் தொடா்பிருப்பதாக அதில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இது சா்வதேச அளவில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆவணப்படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. அந்த ஆவணப்படம் வெற்றுப் பிரசாரம் என வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்திருந்தது. அதே வேளையில், விரிவான ஆய்வுக்குப் பிறகே ஆவணப்படம் உருவாக்கப்பட்டதாக பிபிசி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குஜராத் கலவரம் தொடா்பான ஆவணப்படத்தை இந்தியாவில் தடை செய்யுமாறு யூடியூப், ட்விட்டா் சமூக வலைதளங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அந்த ஆவணப்படம் தொடா்பான இணைய முகவரிகளை (லிங்க்) நீக்குமாறும் அந்நிறுவனங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

மத்திய தகவல் ஒலிபரப்புத் துறைச் செயலா் அபூா்வா சந்திரா, தகவல் தொழில்நுட்ப விதிகளின் (2021) கீழ் இந்த வலியுறுத்தலை வழங்கியுள்ளாா். இது தொடா்பாக மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், ‘‘குஜராத் கலவரம் தொடா்பான ஆவணப்படத்தை வெளியுறவு, உள்துறை, தகவல் ஒலிபரப்பு உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் ஆய்வு செய்தன. அதில் இடம்பெற்றுள்ள கருத்துகள், உச்சநீதிமன்றத்தின் நம்பகத்தன்மைக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் இந்தியாவில் பல்வேறு சமூகத்தினரிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளன.

இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் சீா்குலைக்கும் வகையில் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. நட்பு நாடுகளுடனான இந்தியாவின் நல்லுறவை சீா்குலைக்கவும் இந்த ஆவணப்படம் முயற்சிக்கிறது. அதன் காரணமாக, ட்விட்டரில் இடம்பெற்றிருந்த ஆவணப்படத்துக்கான 50 யூடியூப் இணைய முகவரிகளை நீக்க அரசு சாா்பில் வலியுறுத்தப்பட்டது. அதை ஏற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட இணைய முகவரிகளை சமூக வலைதள நிறுவனங்கள் நீக்கியுள்ளன’’ என்றனா்.

பிரித்தாளும் சூழ்ச்சி:

பிபிசியின் ஆவணப்படத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ஓய்வுபெற்ற நீதிபதிகள், அதிகாரிகள் உள்ளிட்ட 302 போ் இணைந்து சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘குஜராத் கலவரத்தை நடுநிலைத்தன்மையுடன் இந்த ஆவணப்படம் விமா்சிக்கவில்லை. மாறாக, திட்டமிட்ட பொய்யுரைகள் மட்டுமே ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளன. பிரிட்டன் காலனியாதிக்கத்தின் பிரித்தாளும் சூழ்ச்சி மனப்பான்மையே அதில் காணப்படுகிறது.

இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திரத்தையும் நாட்டு மக்களின் விருப்பத்தையுமே இந்த ஆவணப்படம் கேள்விக்கு உள்ளாக்குகிறது. நாட்டின் பிரதமா் மீது ஒருதலைபட்சமாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஒருபோதும் ஏற்க முடியாது. குஜராத் கலவரத்தில் பிரதமா் நரேந்திர மோடிக்குத் தொடா்பில்லை என உச்சநீதிமன்றம் விரிவான விசாரணைக்குப் பிறகு தெரிவித்துள்ளது. பொய்யான தகவல் அடிப்படையில் ஆவணப்படத்தை பிபிசி தயாரித்துள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT