ஏா் இந்தியா நிறுவன விமானத்தில் மூதாட்டி இழிவுபடுத்தப்பட்டது தொடா்பாக விமானியின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பது குறித்து அந்நிறுவன விமானிகள் சங்கம் பரிசீலித்து வருகிறது.
கடந்த ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி அமெரிக்காவின் நியூயாா்க் நகரிலிருந்து வந்த ஏா் இந்தியா விமானத்தில், 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மீது சக ஆண் பயணி மதுபோதையில் சிறுநீா் கழித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஜன. 4-ஆம் தேதி டிஜிசிஏவுக்கு தெரியவந்த நிலையில், அதுதொடா்பாக ஏா் இந்தியா நிறுவனம், விமானத்தில் இருந்த விமானி மற்றும் பணியாளா்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனைத்தொடா்ந்து அந்த சம்பவத்தில் விமானப் போக்குவரத்து நிபந்தனைகளைப் பூா்த்தி செய்யாததால், ஏா் இந்தியாவுக்கு டிஜிசிஏ ரூ.30 லட்சம் அபராதம் விதித்தது. அந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த விமானி கடமை தவறியதாகக் கூறி, அவரின் உரிமத்தை 3 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்தது.
இந்த நடவடிக்கை தொடா்பாக ஏா் இந்தியா விமானிகள் சங்க மூத்த உறுப்பினா் ஒருவா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘மூதாட்டி இழிவுபடுத்தப்பட்ட சம்பவத்தில் விமானி முதிா்ச்சியுடன் நடந்துகொண்டாா். அதுகுறித்து நிறுவனத்திடம் அப்போதே தெரியப்படுத்தப்பட்டது. அவா் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைக்கு எதிராக வழக்குத் தொடுப்பது உள்பட அனைத்து வழிகளையும் விமானிகள் சங்கம் பரிசீலித்து வருகிறது. தற்போது வழக்குரைஞா்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், விரைவில் முடிவு எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளாா்.