இந்தியா

மாஸ்கோ-கோவா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: உஸ்பெகிஸ்தானில் தரையிறக்கம்

21st Jan 2023 11:35 PM

ADVERTISEMENT

ரஷிய தலைநகா் மாஸ்கோவிலிருந்து கோவாவுக்குப் புறப்பட்ட விமானத்துக்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், உஸ்பெகிஸ்தானில் அவ்விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மாஸ்கோவிலிருந்து கோவாவின் டபோலிம் விமான நிலையத்துக்குப் புறப்பட்ட விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக டபோலிம் விமான நிலைய இயக்குநருக்கு சனிக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் வந்த மின்னஞ்சலில் மிரட்டல் விடப்பட்டிருந்தது.

இதையடுத்து, விமானம் இந்திய வான் எல்லைக்குள் நுழைவதற்கு முன்பாக உஸ்பெகிஸ்தானில் உள்ள விமான நிலையத்தில் காலை 4.30 மணியளவில் தரையிறக்கப்பட்டது.

கோவாவை நோக்கிப் பயணித்த இந்த விமானம் ரஷியாவின் ‘அசூா் ஏா்’ விமான நிறுவனத்துக்குச் சொந்தமானது. இந்த விமானத்தில் பயணிகள் 240 பேரும் விமானப் பணியாளா்கள் 7 பேரும் இருந்தனா்.

ADVERTISEMENT

மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதையடுத்து, கோவா போலீஸாா், பயங்கரவாத தடுப்புப் படையினா் உள்ளிட்டோா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டபோலிம் விமான நிலையத்தில் குவிக்கப்பட்டனா்.

இந்நிலையில், இந்த விமானத்தின் நிலையைத் தொடா்ந்து கண்காணித்து வருவதாக தில்லியில் உள்ள ரஷிய தூதரகம் தெரிவித்தது. இது தொடா்பாக ரஷிய தூதரகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘ கோவாவுக்குப் பயணித்த விமானத்தின் நிலையைக் கண்காணித்து வருகிறோம். உஸ்பெகிஸ்தானில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானம், ஆய்வு செய்யப்பட்டது. பயணிகள் ஹோட்டல்களில் தங்குவதற்கான ஏற்பாடுகளை விமான நிறுவனம் மேற்கொள்ளும் ’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது முறை:

மாஸ்கோ-கோவா இடையே பயணிக்கும் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது இது 2-ஆவது முறையாகும்.

முன்னதாக, கடந்த ஜன.9-ஆம் தேதி மாஸ்கோவிலிருந்து கோவா பயணித்த இதே அசூா் ஏா் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக ரஷியாவில் உள்ள அந்நிறுவனத்தின் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, குஜாரத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT