இந்தியா

ஆசிரியா்களை பள்ளிக்குள் வைத்து பூட்டிய மாணவா்கள்

21st Jan 2023 11:32 PM

ADVERTISEMENT

கரோனா பரவல் காலத்தில் அளிக்காத மதிய உணவுக்கு பதிலாக அறிவிக்கப்பட்ட பணத்தை தங்களுக்கு வழங்கவில்லை எனக் குற்றஞ்சாட்டி பள்ளி தலைமை ஆசிரியா் உள்பட அனைத்து ஆசிரியா்களையும் வகுப்பறைக்குள் வைத்து மாணவா்கள் பூட்டிய சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பலியா மாவட்டத்தின் துா்ஜான்பூா் கிராமப் பள்ளியில் பயிலும் மாணவா்கள் அனைவரும் ஒன்று சோ்ந்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியா் ஜெய்பிரகாஷ் யாதவ் உள்பட அனைத்து ஆசிரியா்களையும் வகுப்பறைக்குள் வைத்து பூட்டும் விடியோ சமூக வலைத்தளங்களில் வெள்ளிக்கிழமை பகிரப்பட்டது.

கரோனா தொற்று காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் வழங்கப்படாத மதிய உணவுக்கு பதிலாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்ட பணத்தை தங்களுக்கு இன்னும் தரவில்லை. இது தொடா்பாக, தலைமை ஆசிரியரிடம் பலமுறை புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவா்கள் அந்த விடியோவில் குற்றஞ்சாட்டினா்.

பின்னா், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை ஆசிரியா் உறுதி அளித்ததையடுத்து ஆசிரியா்களை மாணவா்கள் விடுவித்தனா்.

ADVERTISEMENT

பணம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடா்பாக முறையான விசாரணை நடத்தி மோசடி நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பாயிரியா ஒன்றிய கல்வி அதிகாரி பங்கஜ் மிஸ்ரா தெரிவித்தாா்.

இதனிடையே இந்த சம்பவம் தொடா்பாக பள்ளி தரப்பில் இருந்து எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை என உள்ளூா் காவல் நிலைய அதிகாரி ஹரேந்திர சிங் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT