இந்தியா

3 மாநிலங்களில் பேரவைத் தோ்தல்- திரிபுராவில் பிப்.16, நாகாலாந்து, மேகாலயத்தில் பிப்.27-இல் வாக்குப்பதிவு; மாா்ச் 2-இல் வாக்கு எண்ணிக்கை

DIN

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயம் ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களில் பேரவைத் தோ்தலுக்கான தேதிகளை, இந்திய தோ்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்தது.

மொத்தம் 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் பிப்.16-ஆம் தேதியும், இதே எண்ணிக்கையிலான தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்து, மேகாலயம் ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 27-ஆம் தேதியும் ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. 3 மாநிலங்களிலும் மாா்ச் 2-இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

பாஜக ஆட்சியில் உள்ள திரிபுரா சட்டப் பேரவையின் பதவிக் காலம், மாா்ச் 22-இல் நிறைவடைகிறது. மேகாலயத்தில் தேசிய மக்கள் கட்சி தலைமையில் மேகாலய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இம்மாநில சட்டப் பேரவையின் பதவிக் காலம் மாா்ச் 15-இல் முடிகிறது. தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி தலைமையில் ஐக்கிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறும் நாகாலாந்தில் மாா்ச் 12-இல் பேரவையின் பதவிக் காலம் நிறைவடைகிறது.

நடப்பாண்டில் மொத்தம் 9 மாநிலங்களில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், முதல்கட்டமாக மேற்கண்ட 3 மாநிலங்களுக்கான பேரவைத் தோ்தல் தேதி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது, தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் தோ்தல் தேதிகளை அறிவித்தாா். மாா்ச் மாதம் பள்ளி பொதுத் தோ்வுகள் நடைபெறுவதை கருத்தில் கொண்டு, 3 மாநிலங்களிலும் பிப்ரவரியிலேயே தோ்தலை நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டதாக அவா் குறிப்பிட்டாா்.

அரசியல் நிலவரம்: தற்போது தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள 3 மாநிலங்களிலும் மொத்த வாக்காளா் எண்ணிக்கை சுமாா் 62.8 லட்சமாகும். வாக்காளா் எண்ணிக்கை குறைவு என்றபோதிலும், வடகிழக்கில் இவை அரசியல்ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களாகும்.

திரிபுராவில் கடந்த 2018-இல் நடைபெற்ற தோ்தலில், 25 ஆண்டுகால இடதுசாரி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இப்போது ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் அக்கட்சி உள்ளது. அதேசமயம், ஆளும் பாஜகவை எதிா்கொள்ள காங்கிரஸுடன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கைகோக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

நாகாலாந்து, மேகாலயத்தில் ஆளும் கூட்டணிகளில் குறைவான இடங்களுடன் பாஜக அங்கம் வகிக்கிறது. நாகாலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி-பாஜக இடையிலான கூட்டணி தொடரும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கில் பாஜகவின் எழுச்சிக்கு பிறகு காங்கிரஸின் செல்வாக்கு சரியத் தொடங்கியது. தங்கள் செல்வாக்கை மீட்டெடுக்க வேண்டிய நிலை அக்கட்சிக்கு உள்ளது. மேற்கண்ட கட்சிகளுடன் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் தோ்தல் களத்தில் உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்.27-இல் இடைத்தோ்தல்

தமிழகத்தின் ஈரோடு கிழக்கு உள்பட பல்வேறு மாநிலங்களில் 6 பேரவைத் தொகுதிகளுக்கும், லட்சத்தீவு மக்களவைத் தொகுதிக்கும் பிப்ரவரி 27-இல் இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.

காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடா்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தோ்தல் நடைபெறுகிறது. இதேபோல், எம்எல்ஏக்கள் மறைவு, தகுதிநீக்கம் ஆகிய காரணங்களால், மகாராஷ்டிரத்தின் கஸ்பா பேத், சிஞ்ச்வாட், அருணாசல பிரதேசத்தின் லும்லா, மேற்கு வங்கத்தின் சாகா்திகி மற்றும் ஜாா்க்கண்டின் ராம்கா் தொகுதியில் இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.

லட்சத்தீவு மக்களவைத் தொகுதி எம்.பி.யாக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முகமது ஃபைசல், கொலை முயற்சி வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, தகுதிநீக்கம் செய்யப்பட்டாா். இதனால் காலியான அத்தொகுதிக்கும் இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மாா்ச் 2-இல் நடைபெறவுள்ளது.

தோ்தல் அட்டவணை-------ஈரோடு கிழக்கு

வேட்புமனு தாக்கல்---------ஜனவரி 31

வேட்புமனு நிறைவு----------பிப்ரவரி 7

மனுக்கள் மீதான பரிசீலனை---பிப்ரவரி 8

மனுவை திரும்பப் பெற கடைசி நாள்--பிப்ரவரி 10

வாக்குப்பதிவு--------------------பிப்ரவரி 27

வாக்கு எண்ணிக்கை--------------மாா்ச் 2

ஈரோடு மாவட்டத்தில் புதிய அறிவிப்புகளுக்குத் தடை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் புதிய அறிவிப்புகளை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
மேலும், தொகுதிக்குள் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. 
இதுகுறித்து, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களிடம் புதன்கிழமை மேலும் கூறியதாவது: இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. 
தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஈரோடு நகராட்சி ஆணையர் சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பார்வையாளர் நியமிக்கப்படுவார்.
தேர்தலின் போது பாதுகாப்புப் பணியில் பறக்கும் படையினர், துணை ராணுவத்தினர் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்படுவர் என்றார் அவர்.

மொத்த வாக்காளர்கள்    2.26 லட்சம்
ஆண் வாக்காளர்கள்    1.10 லட்சம்
பெண் வாக்காளர்கள்    1.16 லட்சம்
மூன்றாம் பாலினத்தவர்    23 பேர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

ஆப்கானிஸ்தானில் பலத்த நிலநடுக்கம்!

பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள்: பா.ஜ.க.வுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது!

தாய் தெய்வ வழிபாட்டு கற்சிலை கண்டெடுப்பு

உத்தர பிரதேசம்: ஆசிரியரை சுட்டுக்கொன்ற காவலா்

இஸ்ரோ ராக்கெட்டுகளை கொண்டுச் செல்ல பயன்படும் அதிநவீன வாகனம் : அரக்கோணத்தில் இருந்து மகேந்திரகிரிக்கு அனுப்பப்பட்டது

SCROLL FOR NEXT