இந்தியா

ஜோஷிமட்டின் 4 வார்டுகள் முற்றிலும் பாதுகாப்பற்றவையாக அறிவிப்பு!

17th Jan 2023 08:21 PM

ADVERTISEMENT


ஜோஷிமட் நகரில் நான்கு வார்டுகள் முற்றிலும் பாதுகாப்பற்றவை என்று பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் ரஞ்சித் குமார் சின்ஹா செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

உத்தரகண்டில் பத்ரிநாத், ஹேமகுண்ட் சாஹிப் ஆகிய முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்கும் அவுலி பனிச்சறுக்கு சுற்றுலா தலத்துக்கும் வாயிலாக விளங்கும் ஜோஷிமட் நகரின் நிலப்பகுதி தாழ்ந்து வருவதால், வீடுகள், கட்டடங்கள் மற்றும் சாலைகளில் பெரிய அளவிலான விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், அங்கு வாழும் மக்கள் பெரும் அச்சுறுத்தலை எதிா்கொண்டுள்ளனா். மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட கட்டடங்களை இடிக்கும் பணியையும் தொடங்கியுள்ளது.

தொடர்ந்து, அந்த நகரின் பல்வேறு பகுதிகளில் வீடுகளில் விரிசல் விழுந்து வரும் நிலையில், மாநில அரசின் தரப்பில் பேரிடர் துறை செயலாளர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

ADVERTISEMENT

ஜோஷிமட் நகரின் நான்கு நகராட்சி வார்டுகள் முற்றிலும் பாதுகாப்பற்றவை. மீதமுள்ள வார்டுகளில் சில வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஜோஷிமட் நிலை குறித்து பல்வேறு நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் இறுதி அறிக்கை வெளியிடப்படும். மழைக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிக்க | ஜோஷிமட் மீட்புப் பணிகளுக்கு தயார் நிலையில் ராணுவம்

ஜோஷிமட் நகரின் இந்த நிலைக்கு காரணமாக கருதப்படும் ஜேபி காலனி நீர் வெளியேற்றமானது குறைந்துள்ளது நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது என்றார்.

இதற்கிடையே, பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து நூற்றுக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

முன்னதாக ஜோஷிமட் நகரின் நிலை மோசமடைந்தால், மீட்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட இந்திய ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவித்திருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT