இந்தியா

ஆசிரியர்களை ‘சார்’, ‘மேடம்’ என்று அழைக்காமல் டீச்சர் என்று அழைக்க அறிவுறுத்தல்!

DIN


திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களின் பாலினத்தை குறிப்பிடும் வகையில் 'சார்' அல்லது 'மேடம்' என அழைக்கும் வழக்கத்தை தவிர்த்து, இனி பொதுவாக 'ஆசிரியர்' (டீச்சர்) என்று மட்டுமே அழைக்க வேண்டும் என மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய குழுத் தலைவர் கே.வி.மனோஜ் குமார், உறுப்பினர் சி.விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி பயிற்றுவிப்பவர்களை பாலின அடிப்படையில் 'சார்' அல்லது 'மேடம்' போன்ற மரியாதைக்குரிய வார்த்தைகளை விட 'ஆசிரியர்' என்பதே பாலின-நடுநிலைச் சொல்லாகும். எனவே, 'ஆசிரியர்' (டீச்சர்) என்ற வார்த்தையைப் பயன்படுத்த மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு இதன் நிமித்தமான வழிகாட்டுதலை அனுப்புமாறு பள்ளிக் கல்வித்துறைக்கு வலியுறுத்தியுள்ளது. 

'சார்' அல்லது 'மேடம்' என்று அழைப்பதற்குப் பதிலாக "ஆசிரியர்" என்று அழைப்பது அனைத்துப் பள்ளிகளின் குழந்தைகளிடையே சமத்துவத்தைப் பேணுவதற்கு உதவுவதோடு, ஆசிரியர்களுடனான அவர்களின் பற்றுதலையும் அதிகரிக்கும் என்றும் குழந்தை உரிமைகள் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.

ஆணையத்தில்  தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கல்வி பயிற்றுவிப்பவர்களை பாலின அடிப்படையில் சார், மேடம் என்று அழைப்பதைத் தடுக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. அதனை பரிசீலனை செய்ததின் அடிப்படையில் அனைவரையும் ஆசிரியர் (டீச்சர்) என்று பாலின சார்பற்று அழைக்குமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த 2021 ஆம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் மாத்தூர் கிராம பஞ்சாயத்து நிர்வாகம்  ‘சார்’, ‘மேடம்’ போன்ற மரியாதை நிமித்தத்துக்குப் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு தடை விதித்தது. 

நாட்டிலேயே முதல்முறையாக அந்த கிராம பஞ்சாயத்து இந்த திட்டத்தை அமல்படுத்தியது ‘சார்’, மேடம்’ வார்த்தைகளுக்கு பதிலாக பெயர் சொல்லியோ, அவர்களின் பதவியை சொல்லியோ அழைக்கலாம். ‘சேட்டன்’, ‘சேச்சி’ என்று கூட அழைக்கலாம். சார், மேடம் போன்ற வார்த்தைகள் அரசு அலுவல் கடிதங்களிலும் இடம் பெறக்கூடாது என முடிவெடுத்தது.

கடந்த ஆண்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில், மாணவர்களிடம் ஆசிரியர்களை இனி சார் மேடம் என்று அழைக்கக் கூடாது. இரு பாலின ஆசிரியர்களையும் ‘ஆசிரியர்’ (டீச்சர்) என்றே அழைக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உள்ளாட்சி அமைப்புகளில் கொண்டுவரப்பட்ட அந்த சீர்திருத்தம் தற்போது அனைத்து பள்ளிகளிலும் எதிரொலிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT