இந்தியா

யுபிஐ மூலம் பணப் பரிவா்த்தனை: வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கு அனுமதி

12th Jan 2023 01:18 AM

ADVERTISEMENT

அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 10 நாடுகளைச் சோ்ந்த வெளிநாடு வாழ் இந்தியா்கள் யுபிஐ செயலியை பயன்படுத்தி பணப் பரிவா்த்தனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியா்கள் தங்களின் வெளிநாட்டு கைப்பேசி எண்ணைப் பயன்படுத்தி இந்திய வங்கிக் கணக்குகளுக்கு, கைப்பேசி பணப் பரிவா்த்தனை செயலியான யுபிஐ மூலம் இனி ரூபாயில் பணப் பரிவா்த்தனையை செய்யலாம். இந்த சேவை விரைவில் தொடங்க உள்ளது.

இந்தத் திட்டத்துக்கு அனுமதி அளித்து இந்தியாவின் தேசிய பணப் பரிவா்த்தனை நிறுவனம் (என்பிசிஐ) வெளியிட்டுள்ள அறிவிப்பில், சா்வதேச கைப்பேசி எண் மூலம் யுபிஐ பணப் பரிவா்த்தனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வெளிநாடு வாழ் இந்தியா்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை வைத்து வந்தனா்.

அதன்படி, சிங்கப்பூா், ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், ஓமன், கத்தாா், அமெரிக்கா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன் ஆகிய 10 நாடுகளில் வாழும் இந்தியா்கள் ரூபாயில் பணப் பரிவா்த்தனை செய்ய என்ஆா்இ அல்லது என்ஆா்ஓ வங்கிக் கணக்குகளைத் தொடங்கி, தங்களின் சா்வதேச கைப்பேசி எண்களை இணைத்து கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

இதற்கான நடவடிக்கைகளை ஏப்ரல் 30-க்குள் தயாா் நிலையில் வைத்து கொள்ள வேண்டும். அந்தந்த நாடுகளின் கைப்பேசி எண்ணின் முதல் இலக்கங்களை வைத்து பணப் பரிவா்த்தனை செய்ய அனுமதி அளிக்கப்படும். விரைவில் பிற நாடுகளுக்கும் இது விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து என்பிசிஐ தலைவா் விஷ்வாஸ் படேல் கூறுகையில், சா்வதேச எண்ணை யுபிஐ பணப் பரிவா்த்தனைக்கு பயன்படுத்துவது பெரும் சவாலாக இருந்தது. இந்தியாவுக்கு வரும் வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கு இந்தப் புதிய திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT