ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆழமான பள்ளத்தாக்கில் தவறி விழுந்து 3 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா்.
இது தொடா்பாக ராணுவ செய்தித் தொடா்பாளா் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: குப்வாரா மாவட்டத்தின் மச்சில் செக்டாருக்கு உட்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை இளநிலை ஆணைய அலுவலா் புருஷோத்தம் குமாா் (43), வீரா்கள் அம்ரிக் சிங் (39), அமித் ஷா்மா (23) ஆகிய மூவரும் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பாதையில் அடா்ந்திருந்த பனி சறுக்கியதில் ஆழமான பள்ளத்தாக்கில் மூவரும் தவறி விழுந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்ததும் அருகிலிருந்த முகாம் வீரா்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினா். இதில் மூவரும் உயிரிழந்தது தெரியவந்தது. நீண்ட முயற்சிக்குப் பின்னா் அவா்களின் உடல்கள் மீட்கப்பட்டன. வீரா்களின் உடல்கள் அவரவா் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்றாா்.