பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, 10 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2024 நாடளுமன்ற தேர்தலுக்கு, தயார்படுத்தும் வகையில், ஜனவரி 15 முதல் 25ம் தேதிக்குள், அமைச்சரவையை மாற்றியமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிறப்பாகச் செயல்படும் மற்றும் தேர்தல் நடைபெறும் மாநிலங்களைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைச்சரவையில் பிரதமர் சேர்க்க வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பே, பிரதமர் அமைச்சரவையை மாற்றம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதாரங்களின்படி, தெலங்கானா மற்றும் நான்கு வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மணிப்பூர், மிசோரம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் 2023ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்தில் இருந்து புதிய அமைச்சர்கள் பதவியேற்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
சில செயல்படாத அமைச்சர்களை பிரதமர், அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்வார் என தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் முக்தார் அப்பாஸ் நக்வி, ரவிசங்கர் பிரசாத் உள்பட சிலர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர். மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர்களுக்கு முக்கிய நிறுவனப் பணிகள் ஒப்படைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
பாஜக தலைவர் ஒருவர் கூறுகையில், "2021 ஆம் ஆண்டு சில அமைச்சர்கள் நீக்கப்பட்டு, சில புதிய முகங்கள் அமைச்சரவையில் இடம் பெற்றனர். மத்திய அரசை தலைமை வகிக்கும் பிரதமரின் விருப்பத்துடன், அமைச்சரவை மாற்றயமைக்கப்படும்." என்று தெரிவித்தார்.
கட்சியில் சிறப்பாக செயல்படும் சுமார் 4 முதல் 5 எம்.பி.க்கள் புதிதாக பதவியேற்பார்கள் எனத் தெரிகிறது. அவர்களில் சிலர் தெலங்கானா மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பகல் பத்து 10ம் நாள் உற்சவம்!
அமைச்சரவை மாற்றத்திற்கு முன், ஜே.பி.நட்டா பாஜக தலைவராக தொடர்வது குறித்து, கட்சி இறுதி முடிவு எடுக்கும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.