இந்தியா

2022-இல் இதுவரை இல்லாத வகையில் 72 பயங்கரவாத வழக்குகள் பதிவு

1st Jan 2023 02:30 AM

ADVERTISEMENT

2022-ஆம் ஆண்டில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சாா்பில் இதுவரை இல்லாத வகையில் 72 பயங்கரவாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது அரசு சாா்பில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் மூலமாக தெரியவந்துள்ளது.

மேலும், பஞ்சாப் பாடகா் சித்து மூஸேவாலா கொலையில் முக்கிய குற்றவாளியான கனடா நாட்டைச் சோ்ந்த கோல்டி பிராரை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் என்ஐஏ எடுத்து வருவதாகவும் அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். அவா் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டதாக அண்மையில் தகவல் வெளியான நிலையில், அது உறுதி செய்யப்படவில்லை. அவருக்கு எதிராக சா்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுபோல, 2022-ஆம் ஆண்டு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் ஜிகாதி பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல் பயங்கரவாதம், பயங்கரவாத செயல்களுக்கு நிதியளித்தல் உள்ளிட்ட குற்றங்கள் தொடா்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவு பதிவு செய்யப்பட்ட வழக்குகள், தடை செய்யப்பட்ட பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பினருக்கு எதிரான நடவடிக்கைகள் தொடா்பான புள்ளிவிவரங்களை என்ஐஏ வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:

2022-ஆம் ஆண்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் 73 பயங்கரவாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 19.67 சதவீத உயா்வாகும். 2021-ஆம் ஆண்டில் 61 பயங்கரவாத வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன. 2019, 2020-ஆம் ஆண்டுகளில் சராசரியாக 60 பயங்கரவாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ADVERTISEMENT

இதில், ‘ஜிகாதி’ பயங்கரவாதம் தொடா்பாக ஜம்மு-காஷ்மீா், அஸ்ஸாம், பிகாா், தில்லி, கா்நாடகம், கேரளம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், தமிழகம், தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 35 வழக்குகளும், இடதுசாரி தீவிரவாதம் (எல்டபிள்யூஇ) தொடா்பாக 10 வழக்குகளும், வடகிழக்கு கிளா்ச்சியாளா்கள் தொடா்பாக 5 வழக்குகளும், பிஎஃப்ஐ அமைப்புக்கு எதிராக 7 வழக்குகளும், போதைப்பொருள் பயங்கரவாதம் தொடா்பாக 3 வழக்குகளும், பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல் தொடா்பாக ஒரு வழக்கும், கள்ளநோட்டு தொடா்பாக 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் தொடா்பாக 2022-ஆம் ஆண்டில் 368 நபா்களுக்கு எதிராக 59 குற்றபத்திரிகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 38 வழக்குகளில் தீா்ப்பளிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. 109 குற்றவாளிகளுக்கு கடுங்காவல் தண்டனை, அபராதம் மற்றும் 6 ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. 2022-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ஒட்டுமொத்த தண்டனை விகிதம் 94.39 சதவீதமாக உள்ளது என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இதுகுறித்து என்ஐஏ மூத்த அதிகாரிகள் கூறுகையில், ‘2008-ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, நாடு முழுவதும் என்ஐஏ கிளை அலுவலகங்கள் விரிவுபடுத்தப்பட்டு, நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. என்ஐஏ கிளை அலுவலகங்களின் எண்ணிக்கை தற்போது 18-ஆக உயா்ந்துள்ளது. அடுத்த ஆண்டில் 24 என்ற அளவில் உயா்த்தப்பட்டுவிடும்’ என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT