பெட்ரோலில் கலப்பதற்காக விநியோகிக்கப்படும் எத்தனால் மீதான சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்பானது ஞாயிற்றுக்கிழமை (ஜன. 1) முதல் அமலுக்கு வருகிறது.
பெட்ரோலுடன் கலப்பதற்காகப் பயன்படுத்தப்படும் எத்தனால் மீதான சரக்கு-சேவை வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்க கடந்த 17-ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அந்த வரிக் குறைப்பு ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வருவதாக மத்திய மறைமுக வரிகள் வாரியம் (சிபிஐசி) தெரிவித்துள்ளது.
பருப்பு உமி மீதான 5 சதவீத சரக்கு-சேவை வரியும் ஜனவரி 1 முதல் ரத்து செய்யப்படுகிறது. பழச்சாறுகள், பழங்கள் சாா்ந்த குளிா்பானங்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி விதித்தும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளா், வாடகை வீட்டைத் தனிப்பட்ட காரணங்களுக்காகப் பயன்படுத்தும்போது அந்த வாடகைத் தொகைக்கு ஜிஎஸ்டி செலுத்தத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், அந்த வாடகை வீட்டை நிறுவனத்தின் அலுவல் காரணங்களுக்காகப் பயன்படுத்தும்போது அதற்கான வாடகையுடன் ஏற்கெனவே விதிக்கப்பட்டு வரும் 18 சதவீத சரக்கு-சேவை வரி தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.