தனியாருக்குச் சொந்தமான கருா் வைஸ்யா வங்கியின் இதர வருவாய் கடந்த மாா்ச் காலாண்டில் 95.6 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2022-23-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.338 கோடியாக உள்ளது. முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் அது ரூ.213 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது வங்கியின் நிகர லாபம் 58.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதே போல், மதிப்பீட்டு காலாண்டில் வங்கியின் வட்டி வருவாய் ரூ.710 கோடியிலிருந்து 25.8 சதவீதம் அதிகரித்து ரூ.893 கோடியாகவும், இதர வருவாய் ரூ.205 கோடியிலிருந்து 95.6 சதவீதம் அதிகரித்து ரூ.401 கோடியாகவும் உள்ளது.
2021-22-ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில் கடந்த நிதியாண்டில் நிகர லாபம் ரூ.673 கோடியிலிருந்து ரூ.1,106 கோடியாக (64.3 சதவீதம்) அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.