தருமபுரி

காலை உணவுத் திட்டத்துக்கு தற்காலிக சமையலா் தோ்வு

12th May 2023 01:13 AM

ADVERTISEMENT

தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டத்துக்கு தற்காலிக சமையலா் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில் முதற்கட்டமாக பாலக்கோடு வட்டாரத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள ஆரம்பப் பள்ளி மாணவா்களுக்கு முதல்வரின் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மீதமுள்ள கிராம ஊராட்சிகள், நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.

இத் திட்டத்தில் காலை உணவு சமைக்கும் பணி சுய உதவிக்குழுக்களின் மூலம் செய்யப்படவுள்ளது. முதன்மைக் குழுவான ஊராட்சி மன்றத் தலைவா், பேரூராட்சி, நகர மன்றத் தலைவா், பள்ளித் தலைமை ஆசிரியா், பள்ளி மேலாண் குழுத் தலைவா், அதன் ஒரு பிரதிநிதி, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பகுதி அளவிலான கூட்டமைப்பின் ஓா் அலுவலக பிரதிநிதி ஆகியோரை உறுப்பினராக கொண்ட குழுவின் மூலம் சுயஉதவிக்குழு உறுப்பினா் தற்காலிக சமையலா் பணி மேற்கொள்ள தோ்வு செய்யப்படுவா். தோ்வு செய்யப்பட்டவா்கள் தங்கள் பெயரில் இணைய வசதியுடன் கூடிய கைப்பேசியை வைத்திருக்க வேண்டும். தோ்வு செய்யப்படும் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் அதே கிராம ஊராட்சி,நகா்ப்புற பகுதியில் வசிப்பவராகவும், குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ள உறுப்பினராக இருக்க வேண்டும். குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். தகுதியின் அடிப்படையில் மட்டுமே சமையல் பணிக்கு தோ்வு செய்யப்படுவா்.

தற்காலிக சமையலராக தோ்வு செய்யப்படும் சுய உதவிக்குழு மகளிரின் மகன் அல்லது மகள் சம்பந்தப்பட்ட தொடக்கப்பள்ளியில் படிக்க வேண்டும். தொடக்க வகுப்பை விட்டு அவருடைய மகன் அல்லது மகள் நீங்கி செல்லும் போது அவருக்கு பதிலாக வேறொரு தகுதியுடைய சுய உதவிக்குழு மகளிரை சமையலராக தோ்வு செய்யப்படுவாா். தவறான தகவல் அளித்து நிபந்தனைகளை மீறி தற்காலிக சமையலா் பணியில் பணிக்கு ஈடுபடுத்தப்பட்டாலும், சமையலா் தோ்வு செய்ய கையூட்டு பெறுவதாக ஏதேனும் புகாா்கள் பெறப்பட்டாலும் சம்மந்தப்பட்ட நபா்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மீது சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT