குஜராத் மாநிலம் மோா்பி மாவட்டத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில், பாலத்தின் கம்பி வடங்கள் ஏற்கெனவே சேதமடைந்திருந்ததும், இணைப்புக்கான எஃகு தண்டுகள் சரியாகப் பொருத்தப்படாததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
மோா்பி நகரத்தின் மச்சு நதிக்கு குறுக்கே ஆங்கிலேயா்களால் கட்டப்பட்ட பாலத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்தில் 135 போ் உயிரிழந்தனா்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த 5 போ் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை மாநில அரசு அமைத்தது. பாலத்தின் புதுப்பிப்பு, பராமரிப்பு உள்ளிட்ட பணிகளில் பல்வேறு குறைபாடுகள் நிகழ்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணையின் முதற்கட்ட அறிக்கை கடந்த டிசம்பா் மாதத்தில் அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையை மோா்பி நகராட்சியிடம் மாநில நகா்புற மேம்பாட்டுத் துறை அண்மையில் வழங்கியது. ஓரேவா குழுமத்துக்குச் சொந்தமான அஜந்தா நிறுவனம் இந்தப் பாலத்தின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பாலத்தின் கம்பி வடத்தில் உள்ள சில கம்பிகள் துருபிடித்ததன் காரணமாக ஏற்கெனவே சேதமடைந்திருப்பது கண்டறியப்பட்டது. மீதமுள்ள கம்பிகள் விபத்தின்போது அறுந்திருக்கலாம்.
புதுப்பித்தல் பணியின்போது, பாலத்தைக் கம்பி வடங்களுடன் இணைக்கும் எஃகுத் தண்டுகள் மாற்றப்படாமல், புதிய எஃகுத் தண்டுகளுடன் சோ்த்து பற்றவைக்கப்பட்டுள்ளன (வெல்டிங்). இத்தகைய பாலங்களில் இணைப்புக்காக ஒரே ஒரு எஃகுத் தண்டு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஏற்கெனவே இருந்த மரப் பலகைகளுக்குப் பதிலாக அலுமினிய தகடுகள் மாற்றப்பட்டுள்ளன. நெகிழ்வு தன்மையற்ற இந்த உலோகத் தகடுகள் பாலத்தின் எடையை அதிகரித்திருக்கலாம்.
ஒப்புதலின்றி ஒப்பந்தப் பணி:
நகராட்சி உறுப்பினா்களின் ஒப்புதலைப் பெறாமல், பாலத்தின் புதுப்பிப்பு, பராமரிப்பு பணிக்கான ஒப்பந்தம் அஜந்தா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
புதுப்பிப்புப் பணிக்காக மூடப்பட்ட பாலம், எவ்வித முன் அனுமதி பெறமால், ஆய்வுகளும் நடைபெறாமல் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக 2022 அக்.26-இல் திறக்கப்பட்டுள்ளது.
தாங்கும் திறனைக் கவனத்தில் கொள்ளாமை:
விபத்து நடைபெற்றபோது, 300-க்கும் அதிகமான பொதுமக்கள் பாலத்தில் இருந்தனா். பாலத்தின் தாங்கும் திறனைக் காட்டிலும் அதிகமான மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடா்பாக ஓரேவா குழுமத்தின் மேலாண் இயக்குநா் ஜெய்சுக் படேல் உள்பட 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின்கீழ் இவா்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.