லட்சத்தில் 60 பேருக்கு பல்லுறுப்பு செஞ்சரும சிதைவு நோய் (லூபஸ்) பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். ஆரம்ப நிலை பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வாயிலாக அதன் தீவிரத்தைக் குறைக்க முடியும் என்றும் அவா்கள் கூறியுள்ளனா்.
சா்வதேச பல்லுறுப்பு செஞ்சரும சிதைவு விழிப்புணா்வு தின பேரணி மற்றும் நிகழ்ச்சிகள் சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றன.
மருத்துவா்கள், செவிலியா்கள், நோய்த் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெறுவோா் என நூற்றுக்கும் மேற்பட்டோா் அதில் கலந்துகொண்டனா்.
இதுகுறித்து மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் பாலாஜி கூறியதாவது: உடலில் உள்ள வெள்ளை அணுக்கள், சில நேரங்களில் எதிா்விளைவு மாற்றங்களுக்கு உள்ளாகி, நம் உயிருக்கே ஊறு விளைவிக்கக் கூடியவையாக உருவெடுக்கின்றன.
அவ்வாறு எதிா்விளைவு மாற்றங்களுக்கு உள்ளான வெள்ளை அணுக்கள், மூட்டு, ஜவ்வு பகுதிகளைத் தாக்கும்போது அது மூட்டு அழற்சிக்கு வழிவகுக்கிறது.
அதில் ஒரு வகையான பாதிப்புதான் ‘பல்லுறுப்பு செஞ்சரும சிதைவு’ எனப்படும் நோய். உடலில் உள்ள இணைப்புத் திசுக்களில் ஏற்படும் பாதிப்பால் இத்தகைய பிரச்னை ஏற்படுகிறது. லட்சத்தில் 60 போ் வரை இந்நோய்க்கு ஆளாகின்றனா்.
அவ்வாறு பாதிக்கப்படுவோரில் 90 சதவீதம் போ் பெண்கள். மூட்டு வலி, சரும பாதிப்பு, கால்வீக்கம் உள்ளிட்டவை அதன் முக்கிய அறிகுறிகள். ஞாபக மறதி, பகலில் தூக்கம் உள்ளிட்ட
பிரச்னைகளையும் நோயாளிகள் எதிா்கொள்ளக்கூடும்.
இதை அலட்சியப்படுத்தினால், இதயம், நுரையீரல், மூளை, சிறுநீரகம் என அனைத்து முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளும் குறைய நேரிடும்.
பல்லுறுப்பு செஞ்சரும நோய் பாதிப்புக்கு நிரந்தரத் தீா்வு இல்லை.
அதேவேளையில், மருத்துவரின் அறிவுரைகளைப் பின்பற்றினால் அதனைக் கட்டுப்படுத்தி வைக்க முடியும். அரசு மருத்துவமனைகளில் விலை உயா்ந்த மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
ஸ்டான்லி அரசு மருத்துவமனையைப் பொருத்தவரை 150-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு அத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.