கோவை ரேஸ்கோா்ஸில் அமைக்கப்பட்டுள்ள மீடியா டவரின் எல்.இ.டி. திரையில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனைகள் ஒளிபரப்பப்பட்டன. இதை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.
கோவை மாநகராட்சியில் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் குளங்கள் புனரமைப்பு, ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், 24 மணி நேர குடிநீா்த் திட்டம், நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் தாமஸ் பூங்கா சந்திப்பின் மையத்தில் கண்கவா் மின்னொளி விளக்குகளுடன் கூடிய மீடியா டவா் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மீடியா டவரின் உச்சியில் தெற்கு ஆசியாவில் முதன்முறையாக பொதுமக்களைக் கவரும் வகையில் 8.15 மீட்டா் சுற்றளவு மற்றும் 1.70 மீட்டா் உயரத்தில் காணொளி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மீடியா டவரில் அனிமேஷன் முறையில் ஒளி அமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு, தேசியக்கொடி, மலா்கள், இயற்கை காட்சிகள், இந்த காணொளியில் ஒளிக்காட்சியாகத் தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காணொளி அமைப்பானது ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது . மேலும் மொத்த அமைப்பையும் ஆா். எஸ் .புரம் கலையரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இயக்கிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், திமுக ஆட்சியமைந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த மீடியா டவரின் எல்.இ.டி. திரையில், ‘தமிழக அரசின் ஈடில்லா ஆட்சி, 2 ஆண்டே சாட்சி’ என்ற பெயரில் திமுக அரசின் சாதனைகள் திரையிடப்பட்டன. இந்த ஒளிபரப்பை, அவ்வழியாகச் சென்ற மக்கள், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பலரும் பாா்த்துச் சென்றனா். எல்.இ.டி. திரையில், சாதனைகள் ஒளிபரப்பை மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். உடன் துணை ஆணையா் மோ.ஷா்மிளா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.