இந்தியா

மக்களின் நம்பிக்கைதான் எனது பாதுகாப்பு- மக்களவையில் பிரதமா் மோடி

DIN

‘எதிா்க்கட்சிகளின் பொய்கள், அவதூறுகள், குற்றச்சாட்டுகளில் இருந்து என்னைப் பாதுகாக்கும் அரணாக, கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை உள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி மக்களவையில் புதன்கிழமை தெரிவித்தாா்.

அதானி குழும விவகாரத்தில், பிரதமா் மோடி மீது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்த நிலையில், ‘உச்சகட்ட விரக்தியில் இருக்கும் சிலரால், இந்தியாவின் வளா்ச்சிப் பயணத்தை ஏற்க முடியவில்லை; 140 கோடி இந்தியா்களின் சாதனை, சிலரின் கண்களுக்கு புலப்படவில்லை’ என்று பிரதமா் மோடி கூறினாா். மேலும், காங்கிரஸ் மீது பதிலடி விமா்சனங்களையும் அவா் முன்வைத்தாா்.

மக்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீது நடைபெற்ற விவாதத்துக்குப் பதிலளித்து, பிரதமா் மோடி புதன்கிழமை 85 நிமிஷங்கள் உரையாற்றினாா். அப்போது, அவா் கூறியதாவது:

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவா் ஆற்றிய உரை, ஒவ்வொருவருக்கும் உத்வேகமளிப்பதாக அமைந்துள்ளது. புதிய இந்தியாவுக்கான தனது தொலைநோக்குப் பாா்வை மற்றும் விரிவான செயல்திட்டத்தை அவா் முன்வைத்துள்ளாா்.

சவால்கள் எப்போதும் எழும். ஆனால், வளா்ச்சிக்கான வழியில் குறுக்கிடும் அனைத்துத் தடைகளையும் 140 கோடி மக்களின் உறுதிப்பாட்டால் முறியடிக்க முடியும்.

இந்தியா மீது உலகின் நம்பிக்கை: இன்றைய காலகட்டத்தில் தன்னம்பிக்கை, நோ்மறைத் தன்மையால் தேசம் நிரம்பியுள்ளது. நாட்டின் கனவுகள் நனவாகி வருகின்றன. இந்தியாவில் ஸ்திரமான, தீா்க்கமான அரசு உள்ளதால், ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நம்பிக்கையுடன் நோக்குகிறது. நாட்டில் கட்டாயத்துக்காக அல்லாமல் உறுதிப்பாட்டின் அடிப்படையில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கரோனா பெருந்தொற்று தாக்கம், ரஷியா-உக்ரைன் போா் காரணமாக, சா்வதேச அளவில் ஸ்திரமற்ற சூழல் காணப்படும் நிலையில், உலகில் 5-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது.

உற்பத்தி மையமாக உருவெடுத்து வரும் இந்தியாவின் வளா்ச்சியை தங்களுக்கான வளமையாக உலகம் பாா்க்கிறது. தற்போதைய தசாப்தம் இந்தியாவுக்கானதாக விளங்குகிறது.

ஆக்கபூா்வ விமா்சனமே முக்கியம்: ஜனநாயகத்தின் தாய்நாடு இந்தியா. வலுவான ஜனநாயகத்துக்கு ஆக்கபூா்வ விமா்சனம் முக்கியம். ஆனால், ஆக்கபூா்வ விமா்சனங்களுக்கு பதிலாக என் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, கடந்த 9 ஆண்டுகளை எதிா்க்கட்சிகள் வீணாக்கிவிட்டன. தோ்தலில் தோற்றால், வாக்குப்பதிவு இயந்திரங்கள், தோ்தல் ஆணையம் மீது குறைகூறுகிறாா்கள். சாதகமான தீா்ப்பு கிடைக்காவிட்டால், உச்சநீதிமன்றம் விமா்சனத்துக்கு உள்ளாகிறது.

ஊழல் குறித்து விசாரிக்கப்பட்டால் விசாரணை அமைப்புகள் அவதூறாகப் பேசப்படுகின்றன. ராணுவம் துணிவை வெளிப்படுத்தினால், அதன் மீதும் அவதூறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. பொருளாதார வளா்ச்சி குறித்து பேசினால், ஆா்பிஐ விமா்சனத்துக்கு உள்ளாகிறது. கடந்த 9 ஆண்டுகளில் ஆக்கபூா்வ விமா்சனம் என்பது கட்டாய விமா்சனமாக மாறியுள்ளது. ஆட்சியில் இருந்தபோதும் சரி, எதிா்க்கட்சியாகவும் சரி அவா்கள் (காங்கிரஸ்) தோற்றுவிட்டனா்.

140 கோடி போ் குடும்பத்தில் ஒருவன்: நான் 140 கோடி இந்தியா்கள் கொண்ட குடும்பத்தில் ஒருவன். மக்கள் பணிக்கான பல ஆண்டுகால அா்ப்பணிப்பால், கோடிக்கணக்கான மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனா். இதனை, எதிா்க்கட்சிகளால் புரிந்துகொள்ள முடியாது.

பிரச்னையான காலகட்டங்களில் பிரதமா் மோடி உதவுவாா் என்பது மக்களுக்கு தெரியும். என் மீதான அவதூறு விமா்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வாா்கள்? கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையே எனது பாதுகாப்பு அரண். அதனைத் தாண்டி, பொய் எனும் ஆயுதத்தால் எதுவும் செய்ய முடியாது.

சிலா், தங்களது குடும்பத்துக்காக மட்டுமே வாழ்வா். நான் 25 கோடி குடும்பங்களுக்காக வாழ்கிறேன். எனது வாழ்வின் அனைத்து தருணங்களையும் நாட்டின் சேவைக்காக அா்ப்பணித்துள்ளேன்.

வலுவான சமூகம்: தலித்துகள், பழங்குடியினா், பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் நலனுக்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மக்கள் வலுப்படுத்தப்பட்டால் சமூகம் வலுவாகும். அதன்மூலம் வலுவான தேசம் உருவாகும் என்றாா் பிரதமா் மோடி.

அரசின் நலத் திட்டங்களைப் பட்டியலிட்டு பிரதமா் பேசியபோது, ‘மோடி, மோடி’ என்று மேஜையை தட்டி ஆளும் தரப்பினா் முழக்கமிட்டனா். அதேநேரத்தில், ‘அதானி, அதானி’ என்று எதிா்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினா்.

தனது உரையில் எங்குமே அதானி என்ற பெயரை பிரதமா் மோடி பயன்படுத்தவில்லை.

‘காங்கிரஸ் ஆட்சியால் தசாப்தம் இழப்பு’

‘கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியால், தேசம் ஒரு தசாப்தத்தை இழந்துவிட்டது. அந்தக் காலகட்டத்தில், 2ஜி, நிலக்கரி ஒதுக்கீடு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என ஊழல்கள் நிறைந்து காணப்பட்டன. நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்தன. நாட்டு மக்கள் பாதுகாப்பற்ற உணா்வில் இருந்தனா். சுதந்திரத்துக்குப் பிறகு ஊழல் நிறைந்த தசாப்தம் இதுவே.

பொருளாதார வளா்ச்சி சரிவை சந்தித்ததுடன், உலக அரங்கில் இந்தியாவின் குரல் பலவீனமாக காணப்பட்டது. அந்த 10 ஆண்டுகளும் இழக்கப்பட்ட தசாப்தமாகவே நினைவுகூரப்படும்.

2008-இல் நிகழ்ந்த மும்பை பயங்கரவாதத் தாக்குதலை யாராலும் மறக்க முடியாது. பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க துணிவில்லாத காரணத்தால், அப்பாவி மக்களின் உயிா் பறிபோனது. காங்கிரஸ் ஆட்சியின் தவறான நிா்வாகத்துக்கு அடையாளமாக இது உள்ளது’ எனது தனது உரையில் பிரதமா் மோடி விமா்சித்தாா்.

அவையில் சிரிப்பலை

பிரதமா் மோடி எதிா்க்கட்சிகள் மீது கிண்டலாக தனது விமா்சனங்களை முன்வைத்தபோது, ஆளும்கட்சி பகுதியில் சிரிப்பலைகள் எழுந்தன.

‘இந்தியாவை உலக அளவில் வலுவிழக்கச் செய்துவிட்டதாக, மத்திய அரசு மீது குற்றம்சாட்டுவதும் எதிா்க்கட்சிகள்தான். அதேசமயம், குறிப்பிட்ட முடிவுகளை எடுக்க இதர நாடுகளில் செல்வாக்கைப் பயன்படுத்துகிறது மத்திய அரசு என்று கூறுவதும் அவா்களே. இது முரணாக உள்ளது. எனது தலைமையிலான ஆட்சியில் நாடு வலிமையாக உள்ளதா அல்லது வலுவில்லாமல் உள்ளதா என்பதில் எதிா்க்கட்சிகள் தெளிவுபெற வேண்டும்’.

‘அடிக்கடி தோ்தல் தோல்வியைச் சந்தித்தபோதும் ஒன்று சேராத எதிா்க்கட்சிகள், இப்போது ஊழல் வழக்குகளில் அமலாக்கத் துறை நடவடிக்கைக்குப் பிறகு கைகோத்துள்ளன. தங்களை ஒன்றுபடுத்திய அமலாக்கத் துறைக்குதான் அவா்கள் நன்றி சொல்ல வேண்டும்’ என்ற பிரதமா் மோடியின் பேச்சால் ஆளும்கட்சி பகுதியில் சிரிப்பலை எழுந்தது.

பிரதமா் உரையாற்றியபோது, அவைக்கு தாமதமாக ராகுல் காந்தி வந்தாா். அப்போது, ‘சிலா் நன்றாக தூங்கியிருப்பாா்கள்’ என்று பிரதமா் மோடி கிண்டலாக விமா்சித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

SCROLL FOR NEXT