இந்தியா

திரிபுரா பேரவைத் தேர்தல்: 45 கோடீஸ்வர வேட்பாளர்கள்!

DIN

அகர்தலா: திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் மொத்தம் 259 வேட்பாளர்கள் உள்ள நிலையில், அவர்களில் 45 பேர் கோடீஸ்வரர்கள். 41 வேட்பாளர்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) தெரிவித்துள்ளது.

60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் வரும் 16}ஆம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. 

வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து, ஏடிஆர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

திரிபுரா தேர்தல் களத்தில் மொத்தமுள்ள 259 வேட்பாளர்களில், 45 பேர் கோடீஸ்வரர்கள். இதில் 17 பேர் பாஜக வேட்பாளர்கள். திப்ரா மோதா கட்சியின் 9 பேர், மார்க்சிஸ்ட் கட்சியின் 7 பேர், காங்கிரஸின் 6 பேர், திரிணமூல் காங்கிரஸின் 4 பேர் கோடீஸ்வர வேட்பாளர்களாவர்.

சாரிலாம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மாநில துணை முதல்வர் ஜிஷ்ணு தேவ் வர்மா, ரூ.15.58 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். அடுத்தடுத்த இடங்களில் மாநில முதல்வர் மாணிக் சாஹா (ரூ.13.90 கோடி சொத்து), திப்ரா மோதா வேட்பாளர் அபிஜித் சர்க்கார் (ரூ.12.57 கோடி சொத்து) உள்ளனர்.

கடன் அதிகமுள்ள வேட்பாளராக, தர்மாநகரில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சயான் பட்டாச்சார்யா (ரூ.3.07 கோடி) உள்ளார்.

மொத்த வேட்பாளர்களில் 41 பேர், தங்களுக்கு எதிராக குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளனர். 2018 தேர்தலில் மொத்தம் களமிறங்கிய 297 வேட்பாளர்களில் 22 பேருக்கு எதிராக குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன.

தற்போதைய தேர்தலில் காங்கிரஸ் 13 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் 7 வேட்பாளர்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் உள்ளன. பாஜகவின் 55 வேட்பாளர்களில் 9 பேர் மீதும், மார்க்சிஸ்ட் கட்சியின் 45 வேட்பாளர்களில் 8 பேர் மீதும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மொத்த வேட்பாளர்களில் 65 பேர் பட்டதாரிகள்; 55 பேர் 12-ஆம் வகுப்பு வரை படித்தவர்கள். 36 பேர் எட்டாம் வகுப்பு வரையும், 9 பேர் ஐந்தாம் வகுப்பு வரையும் படித்தவர்கள் என்று ஏடிஆர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

SCROLL FOR NEXT