துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு கோரும் வகையில் ஒடிசாவில் மணல் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்.
துருக்கி, சிரியாவின் எல்லையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்த நாடே உருக்குலைந்து போயுள்ளது. எங்கு நோக்கினாலும் மரண ஓலங்கள்.
திங்கள்கிழமை அதிகாலை இவ்வளவு மோசமாக விடியும் என்று ஒருவரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். ஒன்றா, இரண்டா...பல ஆயிரக்கணக்கான உயிர்களை இந்த நிலநடுக்கம் காவு வாங்கியுள்ளது.
ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஆயிரக்கணக்கான பலி எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது. நினைத்தாலே மனம் பதைக்கிறது.
"Join Hands to Save The #Earthquake Victims" ! My sand art at Puri beach in India. #TurkeySyriaEarthquake pic.twitter.com/WbnM3H8EUl
இதுவரை 16 ஆயிரத்துக்கும் மேல் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இன்னும் எத்தனை உயிர்கள் கட்டட இடிபாடுகளில் புதைந்துள்ளதோ என்று மீட்புக் குழுவினர் இரவு பகல் பாராமல் தொடர்ந்து நான்காவது நாளாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக ஒடிசாவின் பூரி கடற்கரையில் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றக் கைகோர்போம் என்ற செய்தியுடன் மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.
அந்த சிற்பத்தில் கட்டடத்தின் இடிபாடுகளில் ஒரு சிறுவனின் உடல் இருப்பதாக மிகவும் அழகாக சித்தரித்துள்ளார். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.