இந்தியா

வங்கிகள், எல்ஐசி-யில் உள்ள மக்களின் பணம் குறித்து பயமாக இருக்கிறது: மம்தா பானர்ஜி

9th Feb 2023 06:41 PM

ADVERTISEMENT

வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் எல்ஐசி ஆகியவற்றில் மக்கள் செலுத்தியுள்ள பணம் குறித்தும், எதிர்காலத்தில் இந்த நிறுவனங்களின் நிலை குறித்தும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கவலை தெரிவித்துள்ளார்.

அண்மையில் அமெரிக்க நிறுவனமான ஹிண்டென்பர்க் அதானி குழுமப் பங்குகள் குறித்து வெளியிட்ட அறிக்கை பங்குச் சந்தையில் புயலை கிளப்பியது. இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்ற, இறக்கங்களை சந்தித்தன. இந்த அறிக்கையின் விளைவாக அதானி குழுமப் பங்குகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன. அதானி குழுமப் பங்குகளில் பொதுத் துறை நிறுவனங்களான எல்ஐசி மற்றும் எஸ்பிஐ முதலீடு செய்துள்ள விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

இதையும் படிக்க: காதலர் தினம் 'மாடு அணைப்பு நாளா?' - இந்தியக் கம்யூனிஸ்ட் கேள்வி

இந்த நிலையில், வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் எல்ஐசி ஆகியவற்றில் மக்கள் செலுத்தியுள்ள பணம் குறித்தும், எதிர்காலத்தில் இந்த நிறுவனங்களின் நிலை குறித்தும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (பிப்ரவரி 9) கவலை தெரிவித்துள்ளார். பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பேசியதாவது: ஒரு நாள் இந்த பொதுத் துறை நிறுவனங்களை அரசு முடிவுக்கு கொண்டுவந்து விடும். அப்போது மக்கள் எங்கே போவார்கள்?. பொதுமக்கள் வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் எல்ஐசி ஆகியவற்றில்  பணம் செலுத்தியுள்ளனர். ஆனால், இந்த நிறுவனங்கள் மக்கள் பணத்தை பல்வேறு வியாபாரிகளுக்கு கடனாக அளித்து வருகிறது. மேற்கு வங்கத்துக்கு நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை. இந்த திட்டத்தின் கீழ் மேற்கு வங்கத்துக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி மத்திய  அரசினால் வழங்கப்பட வேண்டியுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள மக்களின் நலத்திட்ட உதவிகளுக்காக கொண்டுவரப்படும் திட்டங்களுக்கான நிதியும் மத்திய அரசினால் நிறுத்தி வைக்கப்படுகிறது. ஏழை மக்களை வஞ்சிக்காமல் உடனடியாக மத்திய அரசு நிதியினை வழங்க வேண்டும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT