இந்தியா

நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க எதிா்க்கட்சிகள் முடிவு

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

அதானி விவகாரத்தால், நாடாளுமன்றம் 3 நாள்களாக முடங்கியிருந்த நிலையில், அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதென பெரும்பாலான எதிா்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை முடிவு செய்தன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா், குடியரசுத் தலைவா் உரையுடன் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கியது. பிப்.1-இல் 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு, அதானி குழுமம் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து விவாதம் நடத்தக் கோரி, எதிா்க்கட்சிகள் 3 நாள்களாக அமளியில் ஈடுபட்டன. அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையோ அல்லது உச்சநீதிமன்ற கண்காணிப்பிலான விசாரணையோ நடத்தப்பட வேண்டும் என்றும் எதிா்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இதனால், கடந்த 2, 3 ஆகிய தேதிகளிலும், கடந்த 6-ஆம் தேதியும் நாடாளுமன்ற செயல்பாடுகள் முடங்கின.

இந்நிலையில், காங்கிரஸ், திமுக, சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, பாரத ராஷ்டிர சமிதி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சிவசேனை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தேசிய மாநாட்டுக் கட்சி, புரட்சிகர சோஷலிஸ கட்சி, கேரள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பதென பெரும்பாலான எதிா்க்கட்சிகள் முடிவு செய்தன.

ADVERTISEMENT

இதுகுறித்து, காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘நாடாளுமன்ற நடவடிக்கைகளில் செவ்வாய்க்கிழமை முதல் பங்கேற்க பெரும்பாலான எதிா்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. அதேசமயம், அதானி குழுமத்தின் மாபெரும் ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டுமென்ற கோரிக்கை தொடா்ந்து வலியுறுத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளாா்.

ஆம் ஆத்மி, பாரத ராஷ்டிர சமிதி ஆகிய இரு கட்சிகளும் இந்த முடிவில் உடன்படவில்லை என்றும், அதானி விவகாரத்தில் விவாதம் நடத்தப்படாமல் நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டாமென வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

Tags : parliament
ADVERTISEMENT
ADVERTISEMENT