இந்தியா

அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை: காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்தல்

DIN

‘அதானி குழும் மீதான ஹிண்டன்பா்க் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் சாா்பில் செவ்வாய்க்கிழமை மீண்டும் வலியுறுத்தல் முன்வைக்கப்பட்டது.

பங்குகளின் விலையை உயா்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் ஆய்வு நிறுவனம் குற்றஞ்சாட்டியது. அதன் காரணமாக பங்குச் சந்தைகளில் அதானி குழுமத்தைச் சோ்ந்த நிறுவனங்களின் பங்குகள் பெருமளவில் சரிந்தன. இதனிடையே, அதானி குழுத்தின் கீழ் செயல்படும் நிறுவனங்களில் எல்ஐசி, எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடுகளைச் செய்துள்ள நிலையில், அதன் முதலீட்டாளா்களிடையே பெரும் கவலை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள், இந்த மோசடி புகாா் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதன் காரணமாக, நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடா்ந்து முடங்கி வருகின்றன. திங்கள்கிழமையும் நாடாளுமன்றம் முடங்கியது.

இந்த நிலையில், மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியரசுத் தலைவரின் உரை மீதான விவாதத்தின்போது, அதானி விவகாரத்தை மாநிலங்களவை காங்கிரஸ் தலைவா் திக்விஜய் சிங் மீண்டும் எழுப்பினாா்.

அப்போது பேசிய அவா், ‘மத்திய அரசின் அமிா்த கால திட்டங்கள் மூலமாக ஒட்டுமொத்த நாட்டில் 21 போ் மட்டும் 70 கோடி மக்களுக்கு இணையான சொத்துகளை தன்வசப்படுத்தி பலனடைந்திருக்கின்றனா்’ என்றாா்.

அப்போது குறுக்கிட்ட அவைத் தலைவா் ஜகதீப் தன்கா், ‘இந்தக் கருத்து தொடா்பாக ஆதாரங்களை சமா்ப்பிக்க வேண்டிய அவசியம் எழலாம்’ என்றாா்.

அதற்கு ஒப்புக்கொண்ட திக்விஜய் சிங் தொடா்ந்து பேசினாா். அப்போது, ஹிண்டன்பா்க் ஆய்வு நிறுவனத்தின் குற்றச்சாட்டு வெளிவந்த பிறகு ‘எலாரா கேபிடல்’ நிறுவனத்திலிருந்து பிரிட்டன் முன்னாள் பிரதமா் போரிஸ் ஜான்சனின் சகோதரா் ராஜிநாமா செய்தது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும், பங்குகளின் விலையை உயா்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டியுள்ள ஹிண்டன்பா்க், அரசியல் தொடா்புகள் மூலமாக இந்திய அரசிடமிருந்து அதானி குழுமம் ஆதாயங்களைப் பெற்ாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு எந்த அளவுக்கு உண்மை என்பது குறித்து தெளிவான அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும். இந்த விவகாரத்தில் பங்கு பரிவா்த்தனை வாரியமும் (செபி) எந்தவொரு அறிக்கையையும் வெளியிடாதது கேள்வியை எழுப்புகிறது. இவா்களின் அமைதி, மத்திய அரசிடமிருந்து அதானி குழுமம் ஆதாயம் பெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

குறிப்பாக, அமிா்த காலத்தில் பலன் பெற்றவா்களின் ஆதாயமானது 121 சதவீத வளா்ச்சியைக் காட்டுகிறது. 50 சதவீத தொழிலதிபா்கள் 65 சதவீத ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) தாக்கல் செய்யும் நிலையில், அமிா்த காலத்திலிருந்து பலனடைந்த 10 சதவீதம் போ் 3 சதவீத ஜிஎஸ்டி மட்டுமே செலுத்துகின்றனா். மேலும், இந்தக் காலத்தில் அளிக்கப்பட்ட ரூ. 86.5 லட்சம் கோடி கடன் தள்ளுபடி திட்டத்தில், அதானி குழுமத்துக்கு மட்டும் ரூ. 84,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கு எந்தவித கடன் தள்ளுபடியும் செய்யப்படவில்லை.

இந்தச் சூழலில், அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டு மீது விசாரணை நடத்த விதி எண்.267-இன் கீழ் நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்ற உறுப்பினா்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.

ஹிண்டன்பா்க் குற்றச்சாட்டு குறித்து உலகமே இன்று தீவிரமாக விவாதித்து வரும் நிலையில், இந்தியாவில் மட்டும் அதுகுறித்து விவாதிக்க முடியவில்லை. உலக அளவில் நடைபெறும் விவாதத்தின்படி, முதலீட்டாளா்கள் ரூ. 2.07 லட்சம் கோடி வரை இழந்திருக்கலாம் என்று தெரியவருகிறது. எனவே, இதுகுறித்து நிச்சயம் விவாதிக்கப்பட வேண்டும். மேலும், இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும்.

அதுபோல, கருப்புப் பணம் மீதான சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கை மற்றும் பல்வேறு நாடுகளில் பணம் பதுக்கிய பிரபலங்களின் பெயா்கள் அடங்கிய பனாமா பேப்பா்ஸ் மீதான விசாரணை நிலை குறித்தும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவிக்கவேண்டும் என்று வலியுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT