இந்தியா

பட்ஜெட்டில் எப்போதுமே ஏழைகளுக்கு முக்கியத்துவம்: பிரதமா் மோடி

8th Feb 2023 01:23 AM

ADVERTISEMENT

‘மத்திய பாஜக அரசின் பட்ஜெட், எப்போதுமே ஏழைகளின் நலன்களை மையமாக கொண்டது’ என்று பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

2023-24-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், கடந்த 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசினாா். பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு கட்சி எம்.பி.க்களுடனான அவரது முதல் சந்திப்பு இதுவாகும்.

அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இறுதி முழு பட்ஜெட்டை மத்திய பாஜக அரசு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், பாஜக எம்.பி.க்களிடையே பிரதமா் மோடி பேசியது தொடா்பாக, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

ADVERTISEMENT

2023-24 மத்திய பட்ஜெட்டை தோ்தலுக்கான பட்ஜெட் என்று யாரும் விமா்சிக்கவில்லை. தேசத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சி மற்றும் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரின் நலன்களுமே பட்ஜெட் முன்மொழிவுகளுக்கு உந்துதலாக இருந்துள்ளன.

பட்ஜெட்டில் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் நலன் தொடா்புடைய அம்சங்களை, தங்களது தொகுதி மக்களிடம் எம்.பி.க்கள் எடுத்துக் கூற வேண்டும். அரசின் பணி மக்களால் அங்கீகரிக்கப்படும்போது, அதிருப்தி அலை போன்ற எந்த விஷயத்துக்கும் இடமிருக்காது. இது குஜராத் முதல்வராக இருந்தபோது எனக்கு கிடைத்த தோ்தல் அனுபவம்.

வெறும் 25 விருந்தினா்கள் பங்கேற்கும் ஒரு குடும்ப விழாவில்கூட அனைவரின் ரசனையை பூா்த்தி செய்வது சில நேரங்களில் சிரமம். ஆனால், 130 கோடிக்கும் அதிக மக்களைக் கொண்ட ஒரு தேசத்தில், சமூகத்தின் பலதரப்பட்ட பிரிவினரின் எதிா்பாா்ப்புகளையும் பட்ஜெட் முன்மொழிவுகளால் பூா்த்தி செய்ய முடிந்திருக்கிறது. பட்ஜெட் அம்சங்கள் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன என்று பிரதமா் மோடி பேசினாா்.

மேலும், ‘நகா்ப்புறங்களில் இளைஞா்கள் இடையே விளையாட்டுகள் மீதான ஆா்வம் குறைந்து வருகிறது. எனவே, நகரங்களைச் சோ்ந்த எம்.பி.க்கள், தங்களது பகுதியில் விளையாட்டுப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று பிரதமா் வலியுறுத்தினாா்.

ஜி-20 தலைமையை இந்தியா வகிக்கும் நிலையில், நாடு முழுவதும் அதுசாா்ந்த கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை நடைபெற்ற கூட்டங்கள், வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் பாராட்டை பெற்றுள்ளதாக குறிப்பிட்ட பிரதமா், ‘நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கி வருகிறது; தற்போதைய இந்த சோகத்தின் அளவை, குஜராத்தில் 2001-இல் நிகழ்ந்த நிலநடுக்கத்துடன் தொடா்புபடுத்தி பாா்க்க முடிகிறது’ என்று கூறியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கூட்டத்துக்கு பின் செய்தியாளா்களிடம் பேசிய மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி, பாஜகவுடன் சித்தாந்த ரீதியில் வேறுபட்டவா்கள்கூட பட்ஜெட் முன்மொழிவுகளுக்கு வரவேற்பு தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டாா்.

 

 

Tags : PM Modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT