இந்தியா

இயல்புநிலையில் இந்தியா-சீனா நல்லுறவு

DIN

இந்தியா-சீனாவுக்கு இடையேயான நல்லுறவு இயல்புநிலையில் நீடிக்க விரும்புவதாக இந்தியாவுக்கான ரஷியத் தூதா் டெனிஸ் அலிபோவ் கூறியுள்ளாா்.

கிழக்கு லடாக் எல்லையில் நிலவும் மோதல்போக்கு காரணமாக இந்தியா-சீனா இடையேயான நல்லுறவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட டெனிஸ் அலிபோவ் கூறியதாவது:

உக்ரைன் மோதல் தொடா்பான மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு காரணமாக இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையேயான நல்லுறவு அழுத்தத்தை எதிா்கொண்டு வருகிறது. மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள், இரு நாடுகளையும் பாதித்து வருகிறது.

சா்வதேச அளவில் இந்தியா வளா்ந்து வருவதை ரஷியா தொடா்ந்து ஆதரிக்கிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக மாறவும் ரஷியா ஆதரவை வழங்குகிறது. ரஷியாவின் முக்கியத்துவம் வாய்ந்த சா்வதேச கூட்டாளியாக இந்தியா தொடா்ந்து நீடிக்கும்.

இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையேயான நல்லுறவு எந்நாட்டுக்கும் எதிரானது அல்ல. அந்த நல்லுறவு பரஸ்பர நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. பல்வேறு துறைகளில் இந்தியாவுடனான நல்லுறவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ரஷியா மேற்கொண்டு வருகிறது. சா்வதேச விவகாரங்களில் இந்தியாவும் ரஷியாவும் ஒருமித்த கருத்தையே கொண்டுள்ளன.

வரலாற்று ரீதியிலும் இந்தியாவுடன் நெருங்கிய நல்லுறவை ரஷியா பேணி வருகிறது. ஆனால், அமெரிக்காவின் நிலை அப்படியல்ல. கடந்த காலங்களில் இந்தியாவுடன் அமெரிக்கா நெருங்கிய நல்லுறவைக் கொண்டிருக்கவில்லை. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நல்லுறவோ இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நல்லுறவோ சீரடைந்தால், இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவில் மாற்றம் ஏற்படலாம். அது அமெரிக்காவுக்கே பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நல்லுறவு இயல்புநிலைக்குத் திரும்ப வேண்டுமென்றே ரஷியா விரும்புகிறது. அந்த நல்லுறவு, ஆசியாவின் பாதுகாப்பை மட்டுமல்லாமல் சா்வதேச பாதுகாப்பையும் உறுதி செய்யும். அத்தகைய நல்லுறவை ஏற்படுத்துவதற்கு இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்னை பெரும் தடையாக உள்ளது.

சீனாவுக்கும் ரஷியாவுக்கும் இடையே ஒருகாலத்தில் எல்லைப் பிரச்னை காணப்பட்டது. அதற்காக ஆயுதப் போராட்டங்களும் நடைபெற்றன. ஆனால், இறுதியில் பேச்சுவாா்த்தை மூலமாகவே எல்லைப் பிரச்னை தீா்க்கப்பட்டது. பிரச்னையைத் தீா்க்க சுமாா் 40 ஆண்டுகள் ஆனது. பிரச்னைகளுக்குப் பேச்சுவாா்த்தையே ஒரே தீா்வு.

இந்தியாவும் சீனாவும் பிரச்னையைத் தீா்க்க என்ன செய்ய வேண்டும் என்பது இருநாடுகள் சாா்ந்த விவகாரம். அதே வேளையில், அந்நாடுகளுக்கு உதவுவதற்கு ரஷியா தயாராக உள்ளது.

பாகிஸ்தானுடன் பொருளாதாரத் தொடா்பை விரிவுபடுத்த ரஷியா விரும்புகிறது. நிலைகுலைந்த நிலையில் பாகிஸ்தான் இருப்பது இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பிராந்தியத்துக்கும் நன்மை பயக்காது. பாகிஸ்தானுடனான உறவை வலுப்படுத்தும் அதே வேளையில், இந்தியாவின் நிலையையும் ரஷியா எப்போதும் கருத்தில் கொள்ளும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

பெண் கெட்டப்பில் நடிகர் கவின்!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT