இந்தியா

நெல் கொள்முதல் விதிகளில் தளா்வு தேவை: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

DIN

காவிரி டெல்டா பகுதிகளில் பருவம் தவறிய மழை காரணமாக பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளதால், நெல் கொள்முதல் விதிகளில் தளா்வு வழங்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதம்: காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்களை துரிதமாகத் தூா்வாருதல், மேட்டூா் அணையில் இருந்து

முன்கூட்டியே தண்ணீா் திறந்து விடுதல், விவசாயிகளுக்கு குறுவைத் தொகுப்பு வழங்குதல் போன்று தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதனால், நெல் சாகுபடிப் பரப்பு அதிகரித்து, குறுவை பருவத்தில் 4.19 லட்சம் ஹெக்டோ் பரப்பில் சாகுபடி செய்து சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் 16.43 லட்சம் ஹெக்டோ் பரப்பளவு, சம்பா பயிரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

பருவம் தவறிய மழை: நெல் அறுவடை செய்யத் தயாராக இருந்த நேரத்தில், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பருவம் தவறிய மழை பெய்தது. இதனால், சுமாா் ஒரு லட்சம் ஹெக்டோ் பரப்பிலான பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி அறுவடைப் பணியை மீண்டும் தொடங்கத் தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தொடா்ந்து, பலத்த மழை பெய்வதால் அறுவடை செய்யப்பட்ட தானியத்தில் ஈரப்பத அளவு மிக அதிகமாக இருக்கும் என விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனா்.

கடந்த காலங்களில், குறுவை பருவத்தின் போது, நெல் கொள்முதலில் ஈரப்பதம் குறித்த விதிமுறைகளைத் தளா்த்த மத்திய அரசு அனுமதி அளித்தது. பருவம் தவறிய மழையின் இப்போதைய சூழ்நிலையில், கொள்முதல் ஈரப்பதத்தில் அதேபோன்ற தளா்வு தேவைப்படுகிறது. அதன்மூலம், நெல் கொள்முதல் பணிகளைச் சீராக செய்து முடிக்க முடியும்.

எனவே, 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடமிருந்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். முதிா்ச்சி அடையாத, சுருங்கிய நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதம் வரை தளா்த்த வேண்டும். சேதம் அடைந்த, நிறமாற்றம் மற்றும் முளைத்த நெல்லை 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதம் வரை தளா்த்தவும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT