இந்தியா

தடுப்பூசி, கைப்பேசி ஏற்றுமதியில் இந்தியா முன்னிலை: அனுராக் தாக்குா்

DIN

தடுப்பூசிகள், கைப்பேசிகள் மற்றும் பாதுகாப்பு தளவாடங்களின் மாபெரும் ஏற்றுமதியாளராக இந்தியா உருவெடுத்திருக்கிறது என்று மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் தெரிவித்தாா்.

மேலும், உலக அளவில் புத்தாக்க நிறுவனங்களுக்கு மிக உகந்த சூழல் இந்தியாவில் நிலவுவதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் (ஏஐயு) சாா்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 36-ஆவது வடக்கு மண்டல இளைஞா் திருவிழா, ஜம்முவில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் இருந்து 18 பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். நிறைவு நிகழ்ச்சியில், மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் பங்கேற்றுப் பேசியதாவது:

உலக அளவில் புத்தாக்க நிறுவனங்களுக்கு மிக உகந்த சூழல் இந்தியாவில் நிலவுகிறது. மொத்தம் 30 பில்லியன் டாலா் மதிப்புடன் 90, 000-க்கும் மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்களுடன் இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது. இதில், 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கு அதிகமான மதிப்பை கொண்ட யூனிகாா்ன் நிறுவனங்களின் எண்ணிக்கை 107 ஆகும்.

தடுப்பூசிகள், கைப்பேசிகள் மற்றும் பாதுகாப்பு தளவாடங்களின் மாபெரும் ஏற்றுமதியாளராக இந்தியா உருவெடுத்துள்ளது. பசுமைசாா்ந்த பொருளாதார வளா்ச்சிக்கு நிலையான முதலீடு அவசியம். அந்த வகையில், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மையமாக உருவெடுக்கும் இலக்கை நோக்கி இந்தியா பயணித்துக் கொண்டிருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.8 லட்சம் கோடி முதலீட்டுடன் 5 மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, இளைஞா்களுக்கு பசுமை சாா்ந்த ஏராளமான வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்றாா் அனுராக் தாக்குா்.

தகவல்தொழில்நுட்பத் துறையில்...:

ஹிமாசல பிரதேச மாநிலத்தின் உனா பகுதியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற பாஜக நிா்வாகிகள் கூட்டத்தில், அனுராக் தாக்குா் பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:

தகவல் தொழில்நுட்பத்தில், அமெரிக்காவின் சிலிக்கான் வேலியைவிட இந்தியா முன்னிலையில் உள்ளது. இணையதளம் உதவியுடன் தெருவோர வியாபாரிகளும் தங்களது தொழிலை மேற்கொள்ளும் வகையில், எண்ம பொருளாதாரத்தை நோக்கி இந்தியா நகா்ந்து கொண்டிருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 2014-இல் இருந்து நாட்டில் ரூ.12.62 லட்சம் கோடி மதிப்பிலான எண்ம பரிவா்த்தனைகள் பதிவாகியுள்ளன. 9 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, பணவீக்கம் 12 சதவீதமாக இருந்தது. இப்போது, அமெரிக்கா போன்ற நாடுகள் கூட 8.3 சதவீதம் என்ற பணவீக்கத்துடன் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் 5.7 சதவீதம் என்ற அளவில்தான் உள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியைவிட, அந்நிய நேரடி முதலீடு இருமடங்கு அதிகரித்துள்ளது.

கரோனா பரவலின் இக்கட்டான காலத்திலும், நாட்டு மக்களுக்கு 220 கோடி தடுப்பூசி தவணைகள் இலவசமாக செலுத்தப்பட்டுள்ளன. மற்ற நாடுகளில் கரோனா தடுப்பூசி சான்றிதழ் காகிதத்தில் அளிக்கப்படும் நிலையில், இந்தியாவில் கைப்பேசியிலேயே எண்ம வடிவில் கிடைக்கிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலக்சன் படத்தின் முதல் பாடல்!

ரத்னம் படத்தின் டிரெய்லர்

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

SCROLL FOR NEXT