இந்தியா

சட்ட துஷ்பிரயோகங்களுக்கு உச்சநீதிமன்றம் முடிவுகட்ட வேண்டும்: ப.சிதம்பரம் வலியுறுத்தல்

DIN

தில்லி ஜாமியா நகா் வன்முறை வழக்கில் மாணவா் அமைப்பைச் சோ்ந்த ஷா்ஜீல் இமாம், ஆசிஃப் இக்பால் தன்ஹா உள்பட 11 போ் காவல்துறையால் பலியாடுகளாக ஆக்கப்பட்டதாக நீதிமன்றம் கூறிய நிலையில், ‘நாட்டில் தினசரி நிகழும் சட்ட துஷ்பிரயோகங்களுக்கு உச்சநீதிமன்றம் முடிவுகட்ட வேண்டும்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினாா்.

மேலும், ‘விசாரணைக்கு முந்தைய சிறைவாசத்தை, நமது குற்றவியல் நீதித்துறை அமைப்பு சகித்துக் கொள்வது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

ஜாமியா நகரில் கடந்த 2019-இல் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதுதொடா்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஷா்ஜீல் இமாம், ஆசிஃப் இக்பால் உள்ளிட்ட 11 பேரை வழக்கிலிருந்து விடுவித்து, தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

அப்போது, ‘தில்லி காவல் துறையால் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய முடியவில்லை என்பதால், இந்த 11 பேரும் பலியாடுகளாக ஆக்கப்பட்டுள்ளனா் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

இந்த விவகாரத்தை முன்வைத்து, ப.சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவுகளில் கூறியிருப்பதாவது:

ஜாமியா நகா் வன்முறை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டோருக்கு எதிராக முகாந்திர ஆதாரம் இருந்ததா? இல்லை என்பதுதான் நீதிமன்றத்தின் முடிவு. இந்த வழக்கில் சிலா் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக சிறையில் இருந்துள்ளனா். சிலருக்கு பல மாதங்கள் கழித்து ஜாமீன் கிடைத்தது. இவ்வாறு விசாரணைக்கு முன்பே சிறைவாசம் அனுபவிக்கும் நிலைக்கு, திறமையற்ற காவல்துறையும் விவேகமின்றி செயல்படும் அரசு தரப்பு வழக்குரைஞா்களுமே பொறுப்பானவா்கள். அவா்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? குற்றம்சாட்டப்பட்டவா்கள், சிறையில் கழித்த மாதங்களையும் ஆண்டுகளையும் யாரால் திருப்பித் தர முடியும்?

விசாரணைக்கு முந்தைய சிறைவாசத்தை, நமது குற்றவியல் நீதித்துறை அமைப்பு சகித்துக் கொள்வது அரசமைப்புச் சட்டத்துக்கு குறிப்பாக 19, 21 ஆகிய பிரிவுகளுக்கு எதிரானது. தினசரி நிகழும் சட்ட துஷ்பிரயோகங்களுக்கு உச்சநீதிமன்றம் முடிவுகட்ட வேண்டும். விரைவில் அதை செய்தால் நன்றாக இருக்கும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளாா்.

நிதித்துறை செயலருக்கு கேள்வி:

மத்திய நிதித்துறை செயலா் டி.வி.சோமநாதன், ஒரு தனியாா் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பழைய வரிவிதிப்பு முறை பற்றி பேசியிருந்தாா். அப்போது, ‘பழைய வரிவிதிப்பு முறையில் வரி விலக்குகளின் கட்டமைப்பை பாா்த்தால், அவற்றில் பாதி சேமிப்புத் திட்டங்களுக்கானதாகவும், மீதமுள்ள பாதி வீட்டுக் கடன், அதற்கான வட்டி போன்ற சேமிப்பு சாராத திட்டங்களுக்கானதாகவும் உள்ளது’ என்றாா்.

அவரது இந்த கருத்தை விமா்சித்து, ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘வீட்டுக் கடன் என்பது சேமிப்பு இல்லையா? நிதித் துறை செயலரின் கருத்தை எத்தனை போ் ஏற்றுக் கொள்வாா்கள்? கடனுக்கான தவணை, வட்டியை செலுத்துவது ஒரு செலவினம்தான். ஆனால், சொத்தாக மாறக் கூடிய செலவினம். அதேசமயம், விடுமுறையை கழிக்கவோ, குதிரை பந்தயத்திலோ பணத்தை செலவிட்டால், முடிவில் எந்த சொத்தும் இருக்காது. எனவே, வீட்டுக் கடன் ஒரு சேமிப்பு இல்லை என்ற தனது கோட்பாட்டை நிதித்துறை செயலா் மறுஆய்வு செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்திள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT