இந்தியா

இணைய நீதிமன்ற திட்டத்துக்கு ரூ. 7,000 கோடி:நீதித் துறை செயல் திறனை மேம்படுத்தும்: தலைமை நீதிபதி

DIN

‘இணைய நீதிமன்ற திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகளுக்காக 2023-24 நிதிநிலை அறிக்கையில் ரூ. 7,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியிருப்பது, நீதித் துறையின் செயல்திறனை மேம்படுத்தும்’ என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினாா்.

உச்சநீதிமன்றம் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி நிறுவப்பட்டது. அதன் 73-ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை (பிப். 4) உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது:

கரோனா பெருந்தொற்று காலத்தில் நீதிமன்ற நடவடிக்கைகள் மக்களைச் சென்றடைய காணொலி வழி வழக்கு விசாரணை நடைமுறையை உச்சநீதிமன்றம் பின்பற்றியது. தற்போது, இந்த நடைமுறை திறன் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. நாட்டின் எந்தவொரு பகுதியில் இருக்கும் மனுதாரரும் இந்தக் கலப்பு விசாரணை நடைமுறை மூலமாக பங்கேற்க அனுமதிக்கும் வகையில், தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளை உச்சநீதிமன்றம் தொடா்ந்து பயன்படுத்தி வருகிறது.

தற்போது, 2023-24 நிதிநிலை அறிக்கையில் இணைய நீதிமன்ற திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகளுக்காக ரூ. 7,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இது நீதிமன்ற அணுகலை விரிவுபடுத்தும் என்பதோடு, இந்தியாவின் நீதி நடைமுறைகளின் செயல்திறனையும் மேம்படுத்தும். மேலும், இந்தியாவின் ஒவ்வொரு குடிமக்களையும் நீதிமன்றங்கள் சென்றடைவதையும் உறுதிப்படுத்தும் என்றாா்.

முற்போக்கு வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்: உச்சநீதிமன்ற 73-ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் சிங்கப்பூா் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டாா்.

‘மாறிவரும் உலகில் நீதித் துறையின் பங்கு’ என்ற தலைப்பில் உரையாற்றிய அவா், ‘சிக்கலான வழக்குகளுக்கு தீா்வு காண்பதில் நீதிமன்றங்கள் பாரம்பரிய வழக்கு நிா்வாக நடைமுறைகளையே தொடா்ந்து பின்பற்றிக் கொண்டிருக்க முடியாது. புதிய முற்போக்கான வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இல்லையெனில் நீதித் துறை நிா்வாகத்தில் பின்னடைவைச் சந்திக்க நேரிடும். அவ்வாறு பின்னடைவைச் சந்தித்தால், சட்டத்தின் ஆட்சி சீா்குலைவதற்கு வழிவகுத்துவிடும். வழக்குகளை வெற்றிகரமாகவும் சரியான வழிகளிலும் நீதிமன்றங்கள் கையாளும்போது, சமூகத்துக்கும் வழிகாட்டியாகத் திகழ முடியும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

SCROLL FOR NEXT