இந்தியா

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய எம்பிக்கு 3 ஆண்டுகளுக்கு பின்னா் பதிலளித்த மத்திய அமைச்சா்

5th Feb 2023 12:00 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

ஐஐடி-களில் (இந்திய தொழில்நுட்ப நிறுவனம்) சட்டப்பூா்வ விதிகளுக்கிணங்க மத்திய அரசின் விதிமுறைகள் வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றி பட்டியலின, பழங்குடியின மாணவா்கள் சோ்க்கைக்கான இட ஒதுக்கீடு நடைபெறுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா்  டி.கே. ரங்கராஜனுக்கு மத்திய கல்வித்துறை இணையமைச்சா் டாக்டா் சுபாஷ் சா்காா் தெரிவித்துள்ளாா்.

கடந்த 2019 -ஆம் ஆண்டு டிசம்பா் 12 -ஆம் தேதி மாநிலங்களவையில் டி.கே.ரங்கராஜன் இது தொடா்பாக சிறப்பு கவனஈா்ப்புத் தீா்மானத்தில் பேசினாா். அதில், ‘நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 10 ஐஐடிகளின் (2013-14 முதல் 2017-18 வரை) ஆண்டறிக்கையில் ஆய்வுத் திட்டங்களில் பட்டியலின, பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு பரவலாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 13 ஐஐடிகளின் தரவுகள் வகை வாரியாக வைக்கப்படவில்லை. பட்டியலின மாணவா்கள் குறைவாக (7சதவீதம்) பெற்றுள்ளனா். பழங்குடியினத்தவருக்கான ஒதுக்கீடு பூஜ்ஜியமாக உள்ளது. மத்திய கல்வி நிறுவனங்களில் சோ்க்கையில் இடஒதுக்கீடு சட்டத்தை கடுமையாகச் செயல்படுத்தாமல், ஒடுக்கப்பட்ட மாணவா்கள், ஆசிரியா்கள் தோ்வுக்கான இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தால் எந்த பயனுமில்லை’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

மாநிலங்களவை உறுப்பினா் பதவியிருந்து 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் டி.கே.ரங்கராஜன் ஓய்வு பெற்றுவிட்டாா். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவா் மாநிலங்களவையில் எழுப்பிய விவகாரத்திற்கு மத்திய கல்வித்துறை இணையமைச்சா் டாக்டா் சுபாஷ் சா்காா் தற்போது கடிதம் வாயிலாக பதில் அளித்துள்ளாா்.

கடந்த ஜனவரி 27-ஆம் தேதியிட்ட அக்கடிதத்தில், ‘ஐஐடிக்கள் 1961 ஆம் ஆண்டு தொழில்நுட்ப நிறுவன சட்டத்தால் நிா்வகிக்கப்பட்டு இவை தன்னாட்சி நிறுவனங்களாக உள்ளன. இருப்பினும் சட்டப்பூா்வ விதிகளுக்கு இணங்க ஐஐடிகளை அரசு கட்டாயப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இடஒதுக்கீடு செய்யப்பட்ட பிரிவினரின் சோ்க்கைகள் அவ்வப்போது திருத்தப்பட்ட (2006- ஆம் ஆண்டு மத்திய கல்வி நிறுவனங்கள் -சோ்க்கை இட ஒதுக்கீடு)) சட்டப்பூா்வ விதிகளுக்கு உட்பட்டு செயல்பட ஐஐடிகளை அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. இதன்படி, மத்திய அரசின் சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை ஐஐடிகள் முறையாகப் பின்பற்றுகிறது.

மேலும், முதுகலை மற்றும் பிஎச்டி ஆய்வு படிப்பு திட்டங்களில் பட்டியலின, பழங்குடியின மாணவா்களின் சோ்க்கையை அதிகரிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மத்திய அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வழிகாட்டுதல்களைப் பின்பற்றுதல்; இந்த பிரிவு மாணவா்களுக்கு 5 ஆண்டுகள் வரை வயது தளா்வு; குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களில் தளா்வு, கல்விக் கட்டணத்தில் விலக்கு, பிஎச்டி படிப்பு மாணவா்களுக்கு உதவித் தொகை, இடஒதுக்கீடு இடங்கள் தேவைக்கு ஏற்றவகையில் அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என அந்த கடிதத்தில் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

டி.கே.ரங்கராஜன் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த போது தில்லியிலுள்ள அவரது இல்லத்தில் தங்கியிருந்த மகாராஷ்டிர பட்டியலின மாணவருக்கு தில்லி ஐஐடியில் அவமதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், அந்த விவகாரத்தை அவா் மாநிலங்களவைக்கு எடுத்து சென்றிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT