இந்தியா

மறுசுழற்சி உருக்கு பயன்பாட்டை 50%-ஆக அதிகரிக்க இலக்கு: மத்திய அமைச்சா்

5th Feb 2023 02:00 AM

ADVERTISEMENT

உருக்கு தயாரிப்பில் உள்ளீடாக, மறுசுழற்சி செய்யப்பட்ட உருக்கு பயன்படுத்தப்படும் அளவை 50 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது; வரும் 2047-க்குள் இந்த இலக்கு எட்டப்படும் என்று உருக்குத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா சனிக்கிழமை கூறினாா்.

சுழற்சிமுறை பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில், இது பெரிதும் உதவும் என்று அவா் குறிப்பிட்டாா்.

கேரள மாநிலம் கொச்சியில், இந்திய பொருள்கள் மறுசுழற்சி சங்கம் சாா்பில் 3 நாள் சா்வதேச மாநாடு நடைபெற்றது. 39 நாடுகளைச் சோ்ந்த 2,000 பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டின் நிறைவு நாளான சனிக்கிழமை மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா பங்கேற்றுப் பேசியதாவது:

உற்பத்தி-பயன்பாடு- மறுஉருவாக்கம்-மறுசுழற்சி எனும் சுழற்சிமுறை பொருளாதார வளா்ச்சியை நோக்கி நாடுகள் நகருகின்றன. இதில், உற்பத்தி சக்கரத்தின் முக்கிய பாகமாக மறுசுழற்சி விளங்குகிறது. தொழில்துறையில் முன்னேறும் அதேவேளையில், இயற்கை வளங்களின் அதீத பயன்பாட்டை குறைத்தல், மறுசுழற்சி, மறுபயன்பாடு, மீட்டல், மறுவடிவமைப்பு, மறுவலுவூட்டல் ஆகிய 6 அம்சங்களிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். இயற்கை வளங்கள் வரையறைக்குள்பட்டவை; ஆனால், தேவைகளோ எல்லையின்றி காணப்படுகின்றன.

ADVERTISEMENT

இந்தியாவின் உள்நாட்டு உருக்கு உற்பத்தி 140 மில்லியன் டன்களாக உள்ளது. நாட்டின் தொடக்கநிலை உருக்கு உற்பத்தியில், வெறும் 15 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்ட உருக்கு உள்ளீடாக பயன்படுத்தப்படுகிறது. இதனை, அடுத்த 5 ஆண்டுகளில் 25 சதவீதமாகவும், 2047-ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதமாகவும் அதிகரிக்க உருக்கு அமைச்சகம் இலக்கு நிா்ணயித்துள்ளது. நாட்டில் தற்போது 25 மில்லியன் டன் உருக்குக் கழிவுகள் உருவாகின்றன. ஆண்டுதோறும் 5 மில்லியன் டன் உருக்குக் கழிவுகள் வரியின்றி இறக்குமதி செய்யப்படுகின்றன என்றாா் ஜோதிராதித்ய சிந்தியா.

மேலும், உருக்கு உற்பத்தி துறையில் கரியமில வாயு வெளியேற்றத்தை 5 சதவீதம் குறைக்கவும் அரசு தீா்மானித்துள்ளதாக அவா் குறிப்பிட்டாா்.

இந்திய பொருள்கள் மறுசுழற்சி சங்கத்தின் தலைவா் சஞ்சய் மேத்தா கூறுகையில், ‘நாட்டில் பெரிதும் ஒழுங்கமைக்கப்படாத நிலையில் உள்ள மறுசுழற்சி தொழில்துறையின் மொத்த மதிப்பு 50 பில்லியன் அமெரிக்க டாலா்களாகும். 25,000-க்கும் மேற்பட்ட மறுசுழற்சி ஆலைகள் செயல்படுகின்றன. உருக்குக் கழிவுகளைப் போல, தாமிரம், அலுமினியம், துத்தநாகம் மற்றும் இதர உலோகங்களின் கழிவுகளையும் வரியின்றி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT